வைகைப் புயல் வடிவேலு -வம்பு இழுக்கும் சிங்கமுத்து இவர்கள் இருவருமே பல படங்களில் ஒன்றாக நடித்திருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் விவகாரத்தில் வில்லங்க வாதிகளாகி விலகி நிற்பவர்கள்.
வடிவேலு திமுக அனுதாபி .சிங்கமுத்து அதிமுக ஆதரவாளர் மேடைப்பேச்சாளர் .
தன்னை ஏமாற்றி விட்டதாக சிங்கமுத்து மீது வடிவேலு முன்னரே வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.இன்னும் முடிந்த பாடில்லை.
புதிதாக எடுக்கப்பட விருந்த புலிகேசி திரைப்படம் தொடர்பாக இயக்குநர் -தயாரிப்பாளர் ஷங்கர் நடிகர் வடிவேலு மீது கொடுத்திருந்த புகார் காரணமாக வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை போட்டிருப்பதாக சொல்கிறார்கள். இதனால் கடந்த சில வருடங்களாக வடிவேலுவை புதிய படங்களில் பார்க்க முடியவில்லை.
தற்போது தயாரிப்பாளர் சங்கம் ,நடிகர் சங்கம் இரண்டுமே அரசாங்கத்தின் வசமாகி இருக்கிறது .அதனுடைய சுயத்தையும் இழந்து வருகின்றன.
இந்த நிலையில்தான் நடிகர் மனோபாலா நடத்தி வரும் யூ டியூப் சேனலில் நடிகர் சிங்கமுத்துவின் பேட்டி வெளியாகியது.
அதில் தன்னைப்பற்றி தரக்குறைவான செய்திகளை பரப்பி இருப்பதாக புயல் வடிவேலு மிகவும் வருந்தியிருக்கிறார்.
இதனால் நடிகர் சங்கத்துக்கு அரசு நியமித்திருக்கிற தனி அதிகாரியிடம் வடிவேலு புகார் செய்திருக்கிறார்.
அந்த புகாரில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை பார்க்கலாமா?
“நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக இருக்கிறேன். நடிகர் சங்கத்துக்காக என்னால் முடிந்த சில உதவிகளை செய்து வருகிறேன்.
சிங்கமுத்து என்கிற நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட்பேப்பர் என்ற யூடியூப் சேனலில், நடிகர் சிங்கமுத்துவிடம் என்னைப் பற்றி சில கேள்விகளை கேட்க, அதற்கு அவர், என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறானச் செய்திகளையும் பொய் பிரசாரம் செய்தும் பதிலளித்துள்ளார்.
அந்த வீடியோவை, தென்னிந்திய நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர்களின் வாட்ஸ் அப் குரூப்பிலும் வெளியிட்டுள்ளார்.
இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். ஏற்கெனவே எனக்கும் சிங்கமுத்துவுக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதனால் நடிகர் மனோபாலா மீதும் சிங்கமுத்து மீதும் நடிகர் சங்கத்தின் சட்ட விதி எண் 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்”. என்பதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.