தமிழக அரசியலில் திராவிட அரசியலை தவிர்த்து விட்டு வரலாறு எழுதுவது என்பது இயலாத காரியம்.
“அடைந்தால் திராவிடநாடு “என்கிற பிரிவினை முழக்கமுடன்தான் திராவிட இயக்கம் இயங்கியது. தந்தை பெரியார் ,பேரறிஞர் அண்ணா,பேராசிரியர் க.அன்பழகன் ,கலைஞர் கருணாநிதி ,நாவலர் நெடுஞ்செழியன் ,நாஞ்சில் மனோகரன்,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ,கவிஞர் கண்ணதாசன் சி.பி.சிற்றரசு ,ஆசைத்தம்பி ,என எத்தனையோ முன்னோடிகள் திராவிட இயக்கத்தை வளர்த்திருக்கிறார்கள்.
முரண்பட்டு எம்.ஜி.ஆர் விலகி அதிமுகவை தொடங்கினாலும் திமுகவை அடியோடு சாய்க்க முடியவில்லை. எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதா என்கிற இரண்டு ஆளுமைகளை எதிர்த்து நின்று கழகத்தை காத்த காவல் தெய்வம் என்றால் அவர் கலைஞர் கருணாநிதி.
இன்றும் திமுகழகம் வலிமையான இயக்கமாகவே இருக்கிறது என்றால் கலைஞர் கட்டமைத்து வளர்த்திருக்கிற வியூகம்தான் காரணம்.
பள்ளிக்கல்வியைக்கூட முழுமையாக முடிக்காத அந்த முத்தமிழ் அறிஞர் திருக்குறளுக்கு விளக்கம் எழுதுகிறார்.தமிழ் இலக்கியத்தில் தேர்ந்த வல்லவராக இருக்கிறார்என்றால் அதற்குஅவரது முத்தமிழ் மீதான காதல் தான் காரணம் .அவரது பிறந்த நாள் இன்று.
தமிழைப் போற்றி வளர்த்த அந்த தமிழாசானுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து செய்தி பதிவு செய்திருக்கிறார்.
“பகுத்தறிவை எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி, பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் அவர்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன். சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை அவர்.”
கலைஞானி கமல்ஹாசனின் இந்த வாழ்த்துச்செய்தியில் “பகுத்தறிவை எழுத்தில் பேசி “என்கிற வரிகள் உடன்பாடானதுதானா?
கலைஞர் பகுத்தறிவை எழுத்தில் மட்டுமே பேசினார் என்கிற தொனியை உருவாக்கவில்லையா?