‘கண்ணாடி பெட்டிக்குள் லட்டுகளை வைத்துக்கொண்டு விற்பனை செய்யாமல் இருந்தால் என்னய்யா அர்த்தம்.?அந்த லட்டுக்காக நாங்கள் எவ்வளவு நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறோம் தெரியுமா? சீக்கிரமா பெட்டியை திறங்கய்யா ?” என்று விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்பய்யா லாக்டவுன் போகும் என்று அவரவர் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிற அதே நேரத்தில்……….
விஜய் ரசிகர்கள்மட்டுமில்லாமல் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் மீம்ஸ் போடுவதற்காக படம் பார்க்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தியேட்டர் அதிபர்களும் படத்தை சீக்கிரமாக வெளியிட்டால் ஒரு அள்ளு அள்ளலாம் என்கிற வெயிட்டிங்கில்.!
தியேட்டர்கள் திறக்கப்பட்டால் முதல் படம் மாஸ்டர்தான் என்கிற முடிவில்தான் அவர்கள் இருக்கிறார்கள்.
அப்படியா சேதி என்கிற நிலையில் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. கட்டையைப் போட்டிருக்கிறார்
”தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் திரையிடப்பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
கொரோனோ வைரஸின் கொடூரத் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் இந்த சூழ்நிலையில் முதல் படமாக ‘மாஸ்டர்’ படம் திரையிடப்பட்டால் விஜய்க்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும் அது கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்பது தான் உண்மை. சாதாரண சலூன் கடைக்கு முடிவெட்ட செல்வதற்கே ஆதார் கார்டு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதும் அதை அமல்படுத்துவதும் சாதாரண விஷயமல்ல.
அதிலும் விஜய் படம் என்றால் குடும்பத்துடன் வந்து பார்க்கவே நிறைய பேர் ஆசைப்படுவார்கள். வந்தவர்களில் ஒருவருக்கோ இருவருக்கோ நோய்த்தொற்று இருந்தால் கூட அது மற்றவர்களுக்கும் பரவிவிடும் பேராபத்து இருக்கிறது. தமிழக அரசு தியேட்டர்களை திறக்க அனுமதிக்கும் போது, 150 திரைகளுக்கு மிகாமல் ரிலீஸ் செய்யும் படங்களை மட்டுமே திரையிட அனுமதிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் அதிக படங்கள் வெளி வருவதற்கு வாய்ப்புகள் உருவாகும்.
எனவே தமிழக முதல்வர், திரையரங்குகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போது, பொருளாதார சிக்கல்களை காட்டிலும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.” இவ்வாறு கேயார் கூறியிருக்கிறார்.