Visaranai- Review. RATING 4/5.
கதாநாயகன், கதாநாயகியுடன் கலர் கலராய் உடையணிந்து கொண்டு வெளிநாடுகளில் டூயட் பாடும் காட்சி இல்லை!, ஒரே அடியில் பத்து பேரை தெறித்து ஓட வைக்கும் சூப்பர் ஹீரோத் தனமான காட்சிகள் இல்லை! அல்ட்ரா மாடர்ன் ஹீரோயின் இல்லை! ரசிகர்களை விசில் அடிக்க வைக்கும் பஞ்ச் வசனங்கள் இல்லை! ஆனால் 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலராய் பூத்துள்ளது விசாரணை! ‘லாக்-அப்’ என்ற நாவலை மையப்படுத்தி,உருவாகியுள்ளது இதன் திரைக்கதை! தமிழ் நாட்டிலிருந்து :பிழைப்பிற்காக ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார் அட்டக்கத்தி தினேஷ். பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக தனது மூன்று நண்பர்களுடன் பூங்காவில் தங்கி வேலை பார்க்கிறார்.அவர் தங்கியிருக்கும் பகுதியில் ஒரு திருட்டு நடக்க, அவ்வழக்கை விரைவில் முடிக்க, தினேஷ் மற்றும் நண்பர்கள் மூவரையும் கைது செய்து திருட்டை தாங்கள் தான் நடத்தியதாக ஒப்புக்கொள்ளுமாரு சித்ரவதை செய்கிறது ஆந்திர காவல்துறை.வழக்கு நீதிமன்றத்துக்கு வரும்போது சமுத்திரகனியின் உதவியால் நால்வரும் தப்பிக்கிறார்கள். ஆனால் அதற்கு பதிலாக இவர்களிடம் சமுத்திரக்கனி ஒரு உதவி கேட்கிறார், அவர்களும் அந்த வேலை முடிந்தபின் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்கிறார்கள் பிறகு என்ன நடக்கிறது என்பதை மிக யதார்த்தமாகவும் மிகவும் விறுவிறுப்பாக சொல்லும் படம் தான் ‘விசாரணை’. காக்கி சட்டை போலீசாரை இதுவரை சினிமாவில் எப்படி எப்படியோ காட்டியிருக்கிறார்கள். ஆனால் இதில் அவர்களின் நிஜமுகமே இது தானோ என்கிற அளவுக்கு காட்டியுள்ளனர். இப்படத்தை பார்த்த எவரும் (அவர்கள் போலிஸ் குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும்) இனிமேல் போலீசை பார்க்கும் போது அவர்களுக்கு முதுகுத் தண்டு பயத்தில் ஒரு நிமிடம் சில்லிட்டு போகும் என்பதைவிட,! போலிஸ் நிலையத்துக்குள் இனிமேல் யாரும் மழைக்குக் கூட ஒதுங்க நினைக்க மாட்டார்கள் என்பதே உண்மை!
நாயகன் அட்டக்கத்தி தினேஷ். இவர் வாங்கும் ஒவ்வொரு அடியும் நம் மேல் விழுவது போல நமக்கு வலிக்கிறது, அந்த அளவிற்கு தன் நடிப்பால் நம்மை ஈர்க்கிறார்.ஆனால் எத்தனை படங்களுக்கு தான் ஒரே விதமான பாவங்களை காட்டுவார் என்பது தெரிய வில்லை ஆடுகளம் முருகதாஸ் நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நடக்க போகும் விபரீதத்தை அறியாமல் புரோட்டா கடையில் கலந்து கட்டி சிக்கன், ஆம்லேட்,பிரியாணி என ஆர்டர் செய்து சாப்பிடும் காட்சியில் நால்வரும் மிக நன்றாக நடித்துள்ளனர். சமுத்திரகனி இப்படத்திலும் தன் மேம்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் குறிப்பாக , உயர் அதிகாரிகளை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையை நினைத்து தவிக்கும் காட்சியிலும், கிளைமாக்ஸ் காட்சியில் அப்பாவிகளின் சாவுக்கு நாமும் ஒரு காரணம் தான் என்பதை தன் முகத்தில் உணர்வுகளை பிரதிபலிக்கும் இடம் சூப்பர்! தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார் கிஷோர். லாக்கப்பில் வெறும் ஜட்டியுடன் போலிசாரிடம் அடி உதை படும் காட்சிகள் அய்யய்யோ என நம்மை பதை பதைக்க, வைத்து விடுகிறார்.
தனது கண்களிலேயே மிரட்டி எடுக்கிறார் அஜய் கோஷ். கயல் ஆனந்தி இப்படத்தில் ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண்ணாக வந்து போகிறார். ஆனால் நல்ல தேர்வு என்பதையும் சொல்லியே ஆகவேண்டும்.மிரட்டல் போலிஸ் உயர் அதிகாரி வேடத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார் சரவண சுப்பையா. இப்படத்தில் வித்தியாசமான கதையை கையாண்டுள்ளார்கள், யதார்த்தமாக படமாக்கியுள்ளார்கள் என்பதைத் தாண்டி நம்( காக்கி ) சமூகத்தின் உண்மை முகத்தை,அவலத்தை தோலுரித்து காட்டியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். அவரது துணிச்சலை எத்தனை பாராட்டினாலும் தகும். இப்படத்திற்கு நடிப்பு,ஒளிப்பதிவு,இயக்கம்,இசை என கணிசமான விருதுகளுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது வெற்றிமாறன்- ஜீ.வி பிரகாஷ் கூட்டணி இப்படத்திலும் கலக்கியுள்ளது. பின்னணியில் இவரின் இசை கதைக்கு பெரிதும் உதவியுள்ளது. எடிட்டிங் கிஷோர் ,அவரின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பு என்பதை இப்படம் அப்பட்டமாக நமக்கு உணர்த்தி விடுகிறது.காக்கா முட்டை,படத்தை தொடர்ந்து விசாரணை படத்திலும் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி ஜெயித்து காட்டியிருக்கிறது. குறைகள் ஆங்காங்கே தெரிந்தாலும், நிறைகள் நிறைய இருப்பதால் குறைகள் காணாமல் போய்விடுகிறது என்பதே உண்மை மொத்தத்தில் 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலராய் பூத்துள்ளது விசாரணை!