இன்னும் சில நாட்களில் ஓடிடி தளத்தில் வெளி வரவிருக்கிறது பெங்குயின். இதை பெண் குயின் என்றும் சொல்கிறார்கள் .
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில்,கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம்.
எழுதி இயக்கியுள்ள ஈஸ்வர் கார்த்திக் என்ன சொல்கிறார்?
‘ எப்போது தொடங்கியது என்பது தெரியாமலேயே 6 மாதம் போய்விட்டது. உடனே ‘பெண்குயின்’ கதையை 18 நாட்களில் எழுதிமுடித்தேன்.
நாயகியை மையப்படுத்தி ஒரு கதை எழுதலாம் என்ற எண்ணோட்டத்தில் தான் எழுதினேன். சாதாரண ஒரு பெண், அசாதாரண சூழலில் மாட்டிக் கொண்டால் என்ன நடக்கும் என்பது தான் ‘பெண்குயின்’.
இந்தக் கதையை தயாரிப்பு நிறுவனத்திடம் சொன்னவுடன், அவர்கள் உடனே கீர்த்தி சுரேஷ் பெயரைச் சொன்னார்கள். அவர் நடிக்கவில்லை என்றால், வேறு இருவரை அணுகலாம் என்று திட்டமிட்டு இருந்தோம்.
ஆனால், கீர்த்தி சுரேசுக்கு கதை பிடித்துவிட்டது. குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். அப்படி கீர்த்தி சுரேஷ் இதுவரை நடிக்கவில்லை என்பதால் அவருக்கு புதுமையாக இருக்கும் என தோன்றியது. அந்தக் கதாபாத்திரத்தில் மிகப் பிரமாதமாக நடித்திருக்கிறார்.
இதுவொரு த்ரில்லர் கதை என்பதால், 20 நிமிடத்துக்கு ஒரு சஸ்பென்ஸ் என்று நிறைய கதையில் ஒளித்து வைத்துள்ளேன். ஆகையால் இது தான் கதை என்று என்னால் இப்பொது சொல்ல முடியாது. ஒரு லைனில் சொன்னேன் என்றாலே இது தான் கதை என்று யூகித்துவிட முடியும். ஒரு அம்மா தனது பையன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை இந்தப் படத்தில் காணலாம். அந்த மகனைக் காப்பாற்ற ஒரு அம்மா எந்த எல்லைக்கும் செல்வாள் என்பதை தான் பெங்குயின் சொல்ல வருகிறது.
இப்படத்தின் வெளியான டீஸரின் இறுதியில் நீங்கள் பார்க்கும் மாஸ்க் மேன் ஷுட்டிங் முடியும்வரை யாருக்குமே தெரியாது. அவர் யார் என்பதை படமாக்கும் போது கூட ரொம்பவே குறைவான ஆட்களை வைத்துத் தான் படமாக்கினோம். இப்போது கூட படப்பிடிப்பு குழுவில் 20% பேருக்கு மட்டுமே அது யார் என்று தெரியும். கீர்த்தி சுரேஸுக்கும் ரொம்ப தாமதமாகத் தான் சொன்னோம். என்கிறார்.