வரலாற்று நாவல்களில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதைக்கு நட்சத்திரத் தகுதி உண்டு. நாட்டுடைமையாக்கப்பட்ட அக்கதை இன்றும் பல்வேறு பதிப்புகளாக விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. தற்போது இந் நாவலை ‘2டி அனிமேஷன்’ திரைப்படமாக எடுக்கிறார்கள்.இபடைப்பை தயாரித்து வரும் பொ. சரவணராஜா கூறியதாவது,
தமிழக வரலாற்றை எடுத்துக் கொண்டால் சோழர்கள் ஆண்ட காலம், தமிழகத்தின் பொற்காலம். சோழமன்னர்களில் அனைத்து வகையிலும் தன்னிகரற்று விளங்கிய மன்னன் இராஜாராஜசோழன். அவன் அரியணை ஏறிய வரலாற்றை அழகுடன் வரலாற்று உண்மைகளுடன் கல்கியால் புனையப்பட்ட காவியம்தான்’ பொன்னியின் செல்வன்’.இன்றைய தலைமுறைக்கு சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில் தான் இதை 2டி அனிமேஷன் திரைப்படமாக எடுக்கிறோம்.’பொன்னியின் செல்வன் கதையின் கருத்தும் கரையாமல் ,நோக்கும் போக்கும் நோகாமல் ,தகவல்கள் தடுமாறாமல் அதே சமயம் சுவாரஸ்யம் குன்றாமல் சுருக்கியும் உருவாக்க இருக்கிறோம்.அனிமேஷனாக உருவாக்கும் போது அதன் எல்லையும் சுதந்திரமும் பரந்தது. தொழில்நுட்ப சாத்தியங்களில் சிறப்பு சேர்க்க முடியும். படத்தின் அனிமேஷன் இயக்குநர் மு.கார்த்திகேயன் .இவர் இத்துறையில் இருபது ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பவர். இம்முயற்சியில் திரைப்பட ஊடக நண்பர்களும் பின்னணியில் இருக்கிறார்கள். அவர்களின் பக்கபலம் திரைவடிவ முயற்சிக்கு பெரிதும் துணை நிற்கும்.படத்திற்கான இசை, வசனம் போன்றவற்றிற்கு மட்டுமல்ல பின்னணிக் குரலுக்கும் கூட பிரபலமானவர்களை- தமிழ் திரை நட்சத்திரங்களை அணுக இருக்கிறோம். என்கிறார்.