கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அமல் படுத்தப்பட்ட ஊரடங்கால் முடங்கியிருந்த சின்னத்திரை படப்பிடிப்பு மற்றும் திரைப்படங்களின் இறுதிக்கட்ட பணிகளைத் தொடங்க.கடந்த மாதம் பல நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில், தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
இதையடுத்து அமைச்சர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தின் முடிவின் படி,சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் வரும் 19-ம் தேதி முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த நேற்று தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில்,வரும் ஜூன் 19 முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளையும், சினிமாவுக்கான போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளையும் நிறுத்தி வைக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.