நடிகர் விஷால் முதன்முறையாக தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நான்கு மொழிகளில் நடிக்கும்படம் ‘சக்ரா’ .
இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கஸாண்ட்ரா நடிக்கிறார்.இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள்.
‘சக்ரா’வின் குறு முன்னோட்டம் லட்சக்கணக்கான பார்வையாளர்களால் வரவேற்கப்பட்டுள்ளது.
இந்த குறு முன்னோட்டத்தை பார்த்த பலரும், இது ‘இரும்புத்திரை 2ஆம் பாகமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்
இது குறித்து சக்ரா படத்தின் இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் கூறும்போது ‘”சைபர் க்ரைம் பற்றிய படம்தான் “சக்ரா”வும் என்றாலும், இரும்புத்திரைக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தம் இருக்காது.
அதுமட்டுமல்ல இந்த படத்தின் ஒரு காட்சி கூட வேறெந்த படத்திலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது. அப்படிப் புதிய தளத்தில் காட்சிகள் இருக்கும். நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களையும் உங்களால் மறக்க முடியாது. அந்த அளவுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கும்படி கதை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் குடும்ப உணர்ச்சிகரமான காட்சிகள் இருக்கும். ஆனால் அவை வழக்கம் போல் இருக்காது. ஒரு வினாடி கூட பார்வையாளர்கள் கவனம் தவற விட முடியாத அளவுக்கு அவர்களை இருக்கையின் நுனியில் கட்டிப் போடும் படமாக இருக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம்.
ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பின்னணியுள்ள கதையாக “சக்ரா” உருவாகி வருகிறது. வங்கிக் கொள்ளையர்களை விட சைபர் ஹேக்கர்ஸ் என்பவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை விளங்க வைக்கும் கதை . ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் கவனிக்க,யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.”என்கிறார் .