தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்தவர் கேப்டன் என அழைக்கப்படுகிற விஜயகாந்த். எவராலும் அசைக்க முடியாதவர் என்று சொல்லப்பட்ட ஜெயலலிதாவையே அசைத்துப் பார்த்தவர்.சட்டப்பேரவையில் கடுமையான விவாதங்களை சந்தித்தவர். தேமுதிக தொண்டர்கள் இவரது முகம் பார்க்க முடியாமல் அந்த கம்பீரமான கர்ஜனைக் குரலை கேட்க இயலாமல் சோர்ந்து போய் இருக்கிறார்கள்.
விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் கோளாறு காரணமாக ,அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்தார். அவரால் முன்பு போல கம்பீரமான குரலில் சரளமாக பேச முடியவில்லை , நடப்பதில் சிரமமும் ஏற்பட்டது.இதனால் அவருக்கு பேச்சு பயிற்சி,மற்றும் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனாலும் விஜயகாந்தால் தமிழக அரசியலில் முன்னைப் போல பரபரப்பாக செயல்பட முடியாத நிலை இருந்து வந்தது.
ஊரடங்கு காரணமாக அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், சமீபத்தில் மனைவி பிரேமலதா தனது கணவர் விஜயகாந்துக்கு முடி வெட்டி, டைஅடித்து விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக விஜயகாந்துக்கு வீட்டிலேயே சிறப்பு மருத்துவ சிகிசசை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகின ,அவருக்கு கடந்த 20 நாட்களாக அக்குபஞ்சர் சிகிச்சை அளித்து வருகிற மருத்துவர் சங்கர் , விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து மருத்துவர் சங்கர் கூறியுள்ளதாவது
,”விஜயகாந்த் தற்போது மிகவும் நன்றாக இருக்கிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.. மேலும், பள்ளி கல்லூரி காலத்தில் பழகிய நண்பர்களின் நினைவுகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.அவர் தன் நண்பர்களோடு சேர்ந்து மகிழ் ச்சியாக இருக்க விரும்புகிறார்.
மேலும், விஜயகாந்திற்கு நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய் இருந்துள்ளது .ஆனால்,மருத்துவர்கள் அதை ஆரம்பத்தில் கண்டுபிடிக்காமல் விட்டுள்ளனர். அமெரிக்கா சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று வந்தும் அவருக்கு நரம்பு ரீதியான பிரச்சனையை சரி செய்ய முடியவில்லை. தற்போது அக்குபஞ்சர் முறையில்நரம்பு ரீதியான பிரச்சனையை சரி செய்து வருகிறோம்.
கடந்த 20 நாட்களாக அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இன்னும் ஒரு அறுபது நாள் சிகிச்சை மட்டும்தான்அவருக்கு இருக்கிறது. சரியாக மூன்று மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன் . அதே போல தற்போது அவருக்கு 45 சதவீதம் அளவிற்கு உடல் நிலை சார்ந்த பிரச்சனைகள் சரியாகி விட்டதால் நீங்கள் எதிர்பார்த்ததை போல சிறுத்தையாக, வேங்கையாக விஜயகாந்த் வெளியே வருவார்.இப்பொழுது விஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது, தற்பொழுது விஜயகாந்த் தெம்பாகவும் வலிமையாகவும் இருக்கிறார்.
கொரோனோவில் இருந்து பத்திரமாக இருக்க வேண்டும் என அனைவருக்கும் ஆலோசனை வழங்குகிறார்.விஜயகாந்துக்கு வழங்கப்பட்டு வரும் மற்ற சிகிச்சை முறைகள் சிறிது சிறிதாக குறைத்து விட்டோம் . தற்பொழுது அவருக்கு அக்குபஞ்சர் மருத்துவ முறை மட்டுமே எடுக்கப்படுகிறது. மருந்து இல்லாத மருத்துவமுறை இதன் மூலம் முழுமையாக விஜயகாந்த் குணமடைவார்” இவ்வாறு மருத்துவர் சங்கர் கூறியுள்ளார்.