“எப்பய்யா சொர்க்கவாசல் திறக்கும்.?” என்று பக்தர்கள் காத்துக் கிடப்பதைப்போல திரைப்படத் தயாரிப்பாளர்களும் எதிர்பார்த்து நிற்கிறார்கள் “எப்போது ஷூட்டிங் நடத்தலாம்?”என்று.!
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு துறைகள் முடங்கி உள்ளது .
குறிப்பாக சினிமா படப்பிடிப்புகள் கடந்த நான்கு மாதங்களாககேமராக்கள் சுழலவே இல்லை. ஆர்க் விளக்குகள் பியூஸ் ஆகியிருந்தாலும் ஆச்சரியமில்லை.
திரையரங்குகளும் திறக்கப்படாததால் புதிய திரைப்படங்களின் வெளியீடு முடங்கி உள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் சினிமாத்தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பசியும் பட்டினியுமாக உள்ளனர்.சில மாநிலங்களில் படப்பிடிப்புக்கும், சில மாநிலங்களில் தொலைக்காட்சி படப்பிடிப்புக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில்,முடங்கியுள்ள சினிமா படப்பிடிப்பு நாடு முழுவதும் எப்போது தொடங்கும் என்ற கேள்வி திரையுலகினர் மத்தியில் எழுந்துள்ளது.
தற்போது ஊரடங்கில், பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,சில நிபந்தனைகளுடன் திரைப்பட படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
இதையடுத்து வரும் ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பரில் திரைப்பட படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.