ஒரு காலத்தில் அரசியல் சார்ந்த படங்களுக்கும் அனல் பறக்கும் வசனங்களுக்கும் சிவப்புக்கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பினை நல்கினார்கள்.
அதற்கு காரணம் பேரறிஞர் அண்ணா ,கலைஞர் கருணாநிதி ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகர்திலகம் சிவாஜி கணேசன். இவர்கள் பகிரங்கமாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.
இன்ன இயக்கத்தை சார்ந்தவர்கள் என்கிற முத்திரைக்கு வரவேற்பு இருந்தது. இவர்கள் தங்களை திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் என சொல்வதில் தயக்கம் காட்டியதில்லை.
இதே காலகட்டத்தில் திராவிட இயக்கத்துக்கு எதிராக சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின் தமிழரசுக்கழகம் களத்தில் இருந்தது. டி கே.சண்முகம் ,ஏபி .நாகராஜன் ,சின்ன அண்ணாமலை ,கவிஞர் கா.மு.ஷெரிப் ,கு.மா.பாலசுப்பிரமணியம் ,கு.சா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் திரை உலகிலும் பத்திரிக்கை உலகிலும் தி .மு.க.வுக்கு சரியான போட்டியாக இருந்தார்கள். எம்.ஜி.ஆரின்.குலேபகாவலி படத்தை சின்ன அண்ணாமலையின் ‘சங்கப்பலகை ‘பத்திரிக்கையில் இப்படியாக விமர்சனம் செய்யப்பட்டது.’ குலேபகாவலி பலே பாடாவதி.’
மனோகரா படத்துக்குப்போட்டியாக ஏபி.நாகராஜன் ‘பெண்ணரசி ‘படத்தை எடுத்து அவரே நடித்திருந்தார். வசனங்களும் அழகு தமிழில் துள்ளியது .ஆனால் படம் பிளாப். மனோகராவில் சிவாஜியை சங்கிலியால் பிணைத்திருந்த காட்சிக்கு அவ்வளவு வரவேற்பு இருந்தது. அதே மாதிரியான காட்சி பெண்ணரசியிலும் இருந்தது. ஆனால் ஏற்கவில்லை.
இவர்களுக்குப் பின்னர் அரசியல் சார்ந்த படங்களின் வரத்து குறைவாகவே இருந்தது.
அந்த குறையை ஓரளவு நீக்கியவர் இயக்குநர் மணிவண்ணன். இவர் தன்னை தமிழின விடுதலைப்போராளியாக அடையாளம் காட்டிக்கொண்டவர். தேசியத் தலைவர் பிரபாகரனின் ஆதரவாளராக இருந்தார் கடைசி வரை.!
இவரது அமைதி படை திரைப்படத்தின் அரசியல் இன்று வரை பேசப்படுகிறது. அமாவாசை கேரக்டரை மறக்க முடியுமா?
அமைதிப்படை பலரை காயப்படுத்தியது உண்மைதான் !
இந்தப்படத்தைப்போல மற்றொரு படம் வருமா என்கிற ஏக்கம் இருந்துவருகிற நிலையில்தான் ‘துக்ளக் தர்பார்’ என்கிற படத்தின் அறிவிப்பு வந்திருக்கிறது. படத்தின் நாயகன் விஜயசேதுபதி .ஹீரோ என்கிற இமேஜ் வளையத்துக்குள் மாட்டிக் கொள்ளாதவர்.
‘நானும் ரவுடிதான்’ படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி – பார்த்திபன் கூட்டணி இந்தப் படத்தின் இணைகிறது. இதில் அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சுமார் 50% முடிவுற்றுள்ளது. இதர படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு, கோவிந்த் வசந்தா இசை என பிரமாண்ட கூட்டணியுடன் இந்தப் படம் தயாராகிறது.
இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், ‘கோப்ரா’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சீயான் 60’ உள்ளிட்ட படங்களைப் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டுயோஸ் லலித் குமார் ‘துக்ளக் தர்பார்’ படத்தையும் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.