உடல் நலம் ஒத்துழைக்காத முதுமையில்தான் திரை உலகத்தை விட்டு பலர் ஒதுங்கி இருந்தார்கள்.
நல்ல உதாரணம் கேப்டன் விஜயகாந்த்.
புதியவர்களுக்கு வழி விட்டு பலர் ஒதுங்கியதும் உண்டு.
சிறந்த உதாரணம் சிவகுமார். வேறு ஒரு காரணம் சொல்லப்பட்டாலும் அதுவே முழுமையான காரணம் இல்லை.
இத்தகைய உதாரணங்களை விட மக்களால் நிராகரிக்கப்பட்டு ஒதுங்கியவர்களும் இருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ,வசூல் மன்னன் என்றெல்லாம் உச்சம் பெற்று இருக்கிற ரஜினிகாந்த் ஓய்வு பெறப்போகிறார் என்கிற செய்தி கொரானா காலத்தில் சுற்றத்தொடங்கி இருக்கிறது.
இது பரபரப்புக்காக பற்ற வைத்ததா அல்லது உண்மையா என்பதெல்லாம் பின்னர்தான் தெரிய வரும்.ஏனென்றால் அவர் கையில் இரண்டு படங்கள் இருக்கின்றன.
தர்பார் படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,இயக்குநர் சிறுத்தை சிவா படமான அண்ணாத்த பட த்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். டி இமான் இசையமைத்திருக்கிறார் .
கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக முடிவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என ரஜினிகாந்த் கண்டிப்புடன் கூறிவிட்டதால் , இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனாவின் பிடியிலிருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்பே மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கப்போவதாகவும் ஒரு செய்தி இருக்கிறது .ஆனால் தேர்தல் காலம் நெருங்குவதால் கட்சிப்பணிகளை முடுக்குவதற்கு முழுக்கவனம் செலுத்த வேண்டியதிருக்கிறது. ஆள் பலமே இல்லாத கட்சிகள் ஆட்சியை பிடிப்பது பற்றி பேசுகிற காலத்தில் சகல படைகளையும் கையில் வைத்துக்கொண்டிருக்கிற ரஜினிகாந்த் சும்மா இருக்க முடியுமா?
இதனால் அரசியல் நிலைபாட்டுக்காகவும், உடல் நிலையில் முழு கவனம் செலுத்துவதற்காகவும் திரையுலகில் இருந்து விலகிக் கொள்ள ரஜினி முடிவு எடுத்திருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரம் கூறுகிறது.இது உண்மையா என்பது போயஸ்கார்டன் கடவுளுக்குத்தான் தெரியும்.