சமீபத்தில் யோகிபாபு நடித்த காக்டெய்ல் என்கிற படம் Zee5 தளத்தில் வெளியானது. இதில் யோகிபாபுவின் நண்பனாக ஏஜெண்ட் என்கிற கேரக்டரில் பளிச்சென அறிமுகமாகியுள்ளார் நடிகர் கவின்..
ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும், காக்டெய்ல் இவருக்கு நிரந்தர முகவரியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது..
சினிமாவில் தான் நுழைவதற்கு நடத்திய முதல் போராட்டம் காக்டெய்ல், அடுத்ததாக வெளியாக இருக்கும் டேனி ஆகிய படங்களில் நடித்த அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் கவின்.
“மதுரையில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் நான்..ஆனால் படிப்பு ஏறாததால் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டேன்.சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தை வீட்டில் சொன்னபோது பயங்கர எதிர்ப்பு.
அவர்களை சமாதானப்படுத்துவதற்காக வாரத்தில் ஐந்து நாட்கள் வியாபாரத்தை பார்த்துக்கொண்டு மீதி இரண்டு நாட்கள் கார் எடுத்துக்கொண்டு மதுரை பகுதிகளில் நடக்கும் படப்பிடிப்புகளை பார்க்க கிளம்பி விடுவேன்..இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அண்ணன் மகன் எனக்கு நண்பர் என்பதால் அவர் இயக்கிய ஈரநிலம் படப்பிடிப்பில் உதவியாக வேலை பார்த்தேன்.
தமிழகத்தின் முதல் பெண் மேயராக மதுரையில் பொறுப்பேற்றவர் என் அத்தை..
அவரது மகளுக்கும் எனக்கும் திருமணம் நடத்தி வைத்த மு.க.அழகிரி சினிமாவை நினைத்துப் பார்க்கக் கூடாது என எனக்கு அன்புக்கட்டளை போட்டார். ஐந்து வருடம் போனதும் மதுரை அருகில் வாகை சூடவா படப்பிடிப்பு நடத்த வந்த இயக்குநர் சற்குணம், விமல் எனக்கு பழக்கமானார்கள்.
இந்த நிலையில் இயக்குநர் சற்குணம் தயாரித்த ‘மஞ்சப்பை’ படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அய்யா ராஜ்கிரணுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.பின்னர் சண்டிவீரன் படத்தில் வில்லன் நடிகர் லாலின் மகனாக நடித்தேன்.
அப்போதுதான் அந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பி.ஜி.முத்தையாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு பி.ஜி.முத்தையா தயாரிப்பாளராக மாறி ராஜா மந்திரி, பீச்சாங்கை உள்ளிட்ட சில படங்களை தயாரித்தார்.
திடீரென 2019 புத்தாண்டு அன்று போன் செய்து தன்னுடைய உதவியாளர் சந்தான மூர்த்தி இயக்கத்தில் தான் தயாரித்துவரும் டேனி என்கிற படத்தில் ஒரு போலீஸ்காரர் கேரக்டரில் நடிக்க அழைத்தார்.
கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் வரலட்சுமி நடித்துள்ளார்.
பிஜி முத்தையா ‘காக்டெய்ல் என்கிற படத்தையும் தயாரித்து வந்தார்.
ஒருநாள் என்னை அழைத்தவர் அந்தப் படத்திலும் யோகிபாபுவின் நாலு நண்பர்களில் ஒருவராக நடிக்கும்படி கூறினார்.திடீரென ஒருநாள் வாட்ஸ்அப்பில் பிளைட் டிக்கெட் அனுப்பி கிளம்பி வரச் சொன்னார்.
ஏர்போர்ட் வருவதற்குள் படத்தின் முழு ஸ்க்ரிப்ட்டையும் எனக்கு ஈமெயிலில் அனுப்பி சென்னை வருவதற்குள் விமானத்திலேயே படித்துவிடுங்கள் என்றும் கூறிவிட்டார்.
அந்த நான்கு கதாபாத்திரங்களில் எனக்குப் பிடித்த கேரக்டரை என்னையே தேர்ந்தெடுத்துக்
கொள்ளச் சொன்னார்.
அப்படி நான் தேர்ந்தெடுத்தது தான் நான் நடித்த ஏஜெண்ட் கதாபாத்திரம்.
காக்டெய்ல் படத்தில் நடிக்கும்போது யோகிபாபுவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
யோகிபாபு தலைக்கனம் துளியும் இல்லாதவர். நீங்கள் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு சப்போர்ட் பண்ணுவார்.
அடுத்ததாக சில நாட்களில் டேனி படம் Zee5இல் வெளியாக இருக்கிறது.
சினிமாவுக்கான இத்தனை வருட போராட்டங்களில் பலவிதமான அனுபவங்களை என் வாழக்கையில் சந்தித்து விட்டேன்..
என் தந்தை என்னிடம் சொத்துக்கள் தரமாட்டேன் என பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டுதான் சினிமாவில் விட்டுவைத்திருக்கிறார்.
நானும் எழுதிக்கொடுத்துவிட்டேன். அந்த அளவுக்கு சினிமா என்பது என் மனதில் ஆழமாக இறங்கி விட்டது.”என்கிறார்.