தயாரிப்பாளர்களுக்கு புதிய சங்கம் தொடங்கப்படுகிறது.
“ஏற்கனவே இருந்த சங்கம் என்ன ஆயிற்று? “
அது அரசுப் பிரதிநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த சங்கம் 1979-ல் தொடங்கப்பட்டது.
இந்த சங்கத்தின் தந்தைகள் என்று சொல்வதென்றால் வி.சீனிவாசன் ,அரங்கண்ணல் ,கே.கிருஷ்ணமூர்த்தி ,வலம்புரி சோமநாதன் ,,பி.ஆர் .கோவிந்தராஜன் ,கேஆர்ஜி ,ஏவிஎம் முருகன் இவர்களைத்தான் சொல்ல முடியும்.இவர்கள் ஒன்று கூடி அமைத்த அந்த சங்கம் விரைவில் பிளவுபட இருக்கிறது என்பது வருத்தப்படக்கூடிய ஒன்று.
தமிழ்ச்சினிமாவின் பெருமைக்குரியவர்கள் ஏவி.மெய்யப்பன் ,ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ,நாகிரெட்டி ,என இன்னும் பல ஆளுமைகளை சொல்லலாம். அத்தகைய ஆளுமைகளை தற்போது காணமுடியவில்லை. காலம் கடத்தி சென்றுவிட்டது. இத்தகைய ஆளுமைகளை பின்தொடர்ந்த சங்கம் இன்று இல்லை. அரசுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது.
“என்ன காரணம்?”
தலைவராக இருந்த விஷால் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகள். நிதி கையாடல் ,என பல விதமான பலசரக்குப் புகார்கள். அரசுடன் தொடர்புடைய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கொடுத்த அழுத்தம் காரணமாக ஒருசிலரால் இழுத்து மூடப்பட்டது .பிறகு விஷால் தலையிட்டு திறக்கப்பட்டது. தனி அதிகாரியின் கட்டுப்பாட்டில் அந்த சங்கம் இருக்கிறது.
“அப்படியானால் அந்த சங்கம் கலைக்கப்படவில்லை. அப்படி இருக்க புதிய சங்கம் எதற்கு ?காரணம் என்ன என்பது தெரியுமா?”
நாம் விசாரித்தவரையில் உண்மையாகவே படம் எடுத்து பல்லாண்டுகள் பல்லாண்டுகள் ஆகிவிட்டவர்கள் சங்கத்தில் இருந்து கொண்டு பலவித சங்கடங்களை தருகிறார்களாம். லாண்ட் புரமோட்டர்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. இதனால் தொடர்ந்து படம் எடுக்கிறவர்கள் மைனாரிட்டியாக இருப்பதால் அவர்களது நலனுக்கு எதிராக படம் எடுக்காத பழையவர்கள் செயல்படுகிறார்கள் .எனவே தொடர்ச்சியாக படம் எடுக்கிறவர்கள் மட்டுமே இருக்கிறவகையில் ஒரு புதிய சங்கத்தை தொடங்குவோம் என சிலர் கருதியிருக்கிறார்கள்.
“இதற்கு மூளையாக இருந்தவர்கள் யார்?”
“இயக்குநர் இமயத்தை கை காட்டுகிறார்கள். புதிய சங்கம் தொடர்பாக முதலமைச்சர் பழனிச்சாமியை சில தடவைகள் சந்தித்து பாரதிராஜா பேச்சு நடத்தியிருக்கிறார். அரசாங்கத்தின் வழி காட்டுதல் இல்லாமல் நடக்காது என்பது சிலரது கருத்து. புதிய சங்கத்தை முதல்வர்தான் தொடங்கி வைக்கிறார்என்கிறார்கள். ஆடி 18 -ல் புதிய சங்கத்தை முதல்வர் தொடங்குகிறாராம்..இயக்குநர் எஸ் ஏ . சந்திரசேகர் துணையாக இருக்கிறார்.என்கிறார்கள்.”
“புதிய சங்கத்தில் கோஷ்டிகள் இருக்குமா?”
ஆரம்பித்தபிறகுதானே சொல்ல முடியும் .ஆனால் புதிய சங்கம் தற்போது தேவைதானா என்று பல தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயமாக நம்மால் சொல்ல முடியும். கோஷ்டிகள் இல்லாத அமைப்புகள் இருக்கவே முடியாது.
நமக்கு கிடைத்த பட்டியல்படி பாரதிராஜா தலைவர் ,உதவித்தலைவர்களாக டி .சிவா ,டி .ஜி.தியாகராஜன் ,செயலர்களாக எஸ்.ஆர்.பிரபு ,தனஞ்செயன் ,மற்றும் லலித்குமார் ,சுரேஷ்காமாட்சி ஆகியோருக்கும் பதவிகள் வழங்கப்படலாம் என்கிறார்கள்.