குழந்தை தாயின் கருவில் இருக்கும் காலம் பத்து மாதம்.
தமிழகத்தில் பொதுத்தேர்தல் பிறப்பதற்கு இன்னும் ஒன்பது மாதங்கள்.
2021 -மே மாதம் தேர்தல் நடந்தாக வேண்டும். கோவிட் 19 அச்சுறுத்தல் இருக்குமேயானால் ஆளுநர் ஆட்சிக்கும் வாய்ப்பு உண்டு. இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் குடியரசுத்தலைவர் ஆட்சி செலுத்துவதற்கும் வாய்ப்பு இல்லாமல் இல்லை.
அது கொரானாவின் ஆட்டத்தைப் பொருத்தது .
வரப்போகிற தேர்தல் நமக்கு மிகவும் முக்கியமானது
இரண்டு மிகப் பெரிய ஆளுமைகளை இழந்து நிற்கிறோம்.
கலைஞர் கருணாநிதி ,செல்வி.ஜெயலலிதா.
தந்தை பெரியார் ,பேரறிஞர் அண்ணா ஆகியோரின் அடியொற்றி வளர்ந்த இயக்கம் தி.மு.கழகம் .
அண்ணாவின் பெயரைச்சொல்லி வளர்ந்தது மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின்அ ,இ,அ.தி.மு.கழகம்
இந்த இரு இயக்கங்களும் தமிழகத்தில் வேரூன்றி வளர்ந்திருக்கின்றன. இவைகளின் நிழலில் வேறு இயக்கங்கள் செடியாகவே நிற்கின்றன. கூட்டணி அமைக்காமல் அந்த கட்சிகளால் வளர முடியவில்லை.
இந்த நிலையில்தான் சூப்பர்ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் ஆரம்பிக்க இருக்கிறது.
“தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும். போர் தொடங்கும் “என்பதை ரஜினிகாந்த் முன்னரே அறிவித்து விட்டார்.இந்த பிரகடனம் செயல்படுத்தப்படுமா என்கிற சந்தேகம் பல இயக்கங்களுக்கு இருக்கிறது.
இதற்கு காரணமும் இருக்கிறது.
சூப்பர்ஸ்டாரின் தலைமையில்தான் புதிய அமைச்சரவை அமைய வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் இலட்சியம் .இதில் இருந்து அவர்களால் பின் செல்ல முடியாது.
ஆனால் ——-?
“நான் முதலமைச்சர் பதவியை நினைத்துக்கூட பார்க்கவில்லை.இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகுதான் அரசியலுக்கு வருவேன்.நீங்கள் பட்டி தொட்டியெல்லாம் எழுச்சியை ஏற்படுத்துங்கள். 45 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்” என்பதை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் பிரகடனம் செய்திருந்தார்.
குறைந்த பட்சம் ஒரு கெஜ்ரிவால் போல ஒருவர் ஆட்சி பொறுப்பேற்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டிருக்கலாம். ஆனால் தமிழகத்தில் நடப்பதற்கு சாத்தியம் இருக்கிறதா?
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை போல ரஜினி இருந்திருந்தால் அது சாத்தியப்பட்டிருக்கும். அதற்கும் ஆசைப்பட்டிருந்தவர்தான் ரஜினிகாந்த்,
2018 மார்ச் மாதம் எம்.ஜி.ஆர். பெயரால் அமைந்த கல்விக்கூடத்தில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரின் சிலையை திறந்து வைத்தவர் ரஜினிகாந்த். அன்றைய விழாவில் பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது.
“அரசியல் பயணம் என்பது அவ்வளவு ஈஸியானது இல்லை .கரடு முரடான தடைகளை தாண்டி செல்ல வேண்டியதிருக்கும் .ஏழை மக்களுக்கு அவரது ஆட்சியில் கிடைத்த நன்மைகளைப் போல என்னாலும் தரமுடியும் என்று நம்புகிறேன் “என்பதாக பேசியிருந்தார் .
எம்.ஜி.ஆரின் அணுகுமுறை மக்களை சார்ந்து இருந்தது. அடிக்கடி அவர் மக்களை சந்தித்தார். அவர்களுக்காக குரல் கொடுத்தார். இரவு பகல் பாராமல் தமிழகத்தின் மூலை ,முடுக்கெல்லாம் பயணப்பட்டார்.நள்ளிரவிலும் அவர் செல்கின்ற வழிகளில் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை வைத்துக்கொண்டு கொட்டும் பனியிலும் மக்கள் காத்திருந்து புரட்சித்தலைவரை பார்த்தார்கள். நான் அவருடன் பலமுறை பயணித்திருக்கிறேன்.
மாபெரும் ஆளுமையான அவரை இன்றைய அதிமுக அடியோடு மறந்து விட்டது.
அந்த இடத்தை சூப்பர்ஸ்டாரால் நிரப்ப முடியுமா? ஆன்மீக அரசியல் என்று அறிவித்த சூப்பர்ஸ்டார் கந்த சஷ்டி கவசம் இழிவுபடுத்தப்பட்டபோது ஒரு வாரம் கழித்துத்தானே கண்டனத்தைப் பதிவு செய்தார்.!
ஆளும் கட்சியாக திமுக இருந்தபோது கலைஞருக்கு எதிராக கடுமையான எதிர்ப்பினை உடனுக்குடன் பதிவு செய்தவர் மக்கள் திலகம்.
இவரைப்போல செயல்பட வாய்ப்புகள் வந்தும் அதை தவிர்த்திருப்பவர் சூப்பர்ஸ்டார். உதாரணம் மத்திய அரசின் புதிய கல்வி முறை , இயற்கை வளங்களை அழிக்கும் வகையில் உருவாகியிருக்கிற வரைவு மசோதா.
மக்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிய சூப்பர்ஸ்டார் இனியும் அமைதி காப்பது நல்லதல்ல.
–தேவிமணி
1