தங்கர் பச்சன் என்கிற இயக்குநர் தமிழ்ச்சினிமாவின் படைப்பாளிகளில் ஒருவர். இவரது படைப்புகள் சமூகம் சார்ந்தே இருந்தன. அவைகளில் மக்களது வலிகள் இருந்தன. சமூகவிரோதிகளின் சதிராடல் இருந்தன. ஏழை எளியவர்களின் வறிய முகங்கள் வறண்டு கிடந்தன .சிறந்த ஆளுமை மிகுந்த அவரது இந்திய விடுதலை பற்றிய கருத்துகள் வெள்ளைக்காரனை விரட்டிவிட்டு கொள்ளைக்காரனை அமர்த்திய வேதனைகளை அப்படியே பளீரென காட்டுகிறது.
இதோ அவரது வலியின் வரிகள்.!
“அரசியல் என்பது தொண்டாக இருந்தது மாறிப் போய், முதலீடு இல்லாமல், நட்டத்தைச் சந்திக்காத, மிகப்பெரும் வியாபாரமாக மாறிப்போனதுதான் நம் மக்களாட்சியின் மிகப்பெரும் சோகம்.
அளவுக்கு அதிகமாகக் கோடி கோடியாகப் பணம் குவிக்க, மற்றவர்களை மிரட்ட, விரும்பியபடி எல்லாம் குற்றங்களைச் செய்ய, செய்த குற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள என இதற்காகவே பெரும்பாலும் மேலும் மேலும் அரசியல் கட்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
இவற்றை எல்லாம் செய்யச் சொன்னவர்கள், அனுமதி கொடுத்தவர்கள், திட்டம் தீட்டியவர்கள் எல்லாம் யார்? அன்றாடங்காய்ச்சிகளாக வாழ்க்கையை நடத்திக்கொண்டு திரியும் இந்த மக்களா செய்தார்கள்? இத்தகைய திட்டங்களால் இந்த மக்களின் எதிர்கால வாழ்வு, எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பதாகவே இருந்ததன் விளைவுதானே இந்நிலைக்குக் காரணம்!
இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவிலும் நடந்துகொண்டிருக்கிற மும்முரமான வியாபாரம், அரசியல் எனும் தொழில்மட்டும்தான்! அந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்துவிட்டால் எந்தத் தொழிலையும் தொடங்கி விடலாம். எதையும் சாதித்துவிடலாம் என்கிற நிலையைத்தான் இந்தச் சுதந்திரம் நமக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. ஒரு சில வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்டது போல், ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே இந்தத் தேர்தல் அரசியலால் ஆண்டு கொண்டிருக்கின்றன.
வெள்ளையனின் அடிமைத்தனத்திலிருந்து இன்னுயிர்களை இழந்து நமக்கான விடுதலையைப் பெற்றுத் தந்த நம் முன்னோடித் தலைவர்களின் ஆன்மா, நிச்சயம் அரசியலை ஒரு தொழிலாக மாற்றிவிட்டவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கும் என நினைக்கிறேன். கேட்டால், ஆமாம்! தொழில்தான் செய்கிறோம் என அவர்களையாவது மதித்து உண்மையை ஏற்றுக்கொள்வார்களா? அடுத்த ஆண்டும் இதேபோல் சுதந்திரதின வாழ்த்துகளை மட்டுமே சொல்லிக்கொண்டு எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்போம்! ” இவ்வாறு கூறியுள்ளார்.