பிரபல சிரிப்பு நடிகர் நடிகர் குமரிமுத்து (78), மாரடைப்பால் நேற்று நள்ளிரவு மரணம் அடைந்தார்.கடந்த சில வருடங்களாக நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த குமரிமுத்து, கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை நடந்தது. உடல நலம் பெற்று வீடு திரும்பினார் இந்நிலையில்,நேற்று முன்தினம் குமரிமுத்துவுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது . இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, நள்ளிரவு 12.30 மணியளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் காட்டுப்புதூரை சேர்ந்தவர் குமரிமுத்து. அவரது அண்ணன், நடிகர் நம்பிராஜன். இன்னொரு அண்ணன், டைரக்டர் கே.எம்.பாலகிருஷ்ணன். ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த குமரிமுத்து, பிறகு நடிகர் எம்.ஆர்.ராதா உட்பட பலரது நாடகக் குழுக்களில் இணைந்து நடித்தார். 1964ல் நாகேஷ் நடித்த ‘பொய் சொல்லாதே’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் குமரிமுத்து, திமுக மாநில பேச்சாளராக இருந்து, தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வந்தார். மேலும், கிறிஸ்தவ ஊழியமும் செய்து வந்தார்.
கலைமாமணி விருது உட்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ள குமரிமுத்து. தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் பணியாற்றி வந்தார். குமரிமுத்துவின் உடல், பொதுமக்களின் பார்வைக்காக சென்னை நந்தனம் நியூ டவரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 3 மணியளவில், மந்தவெளியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.குமரிமுத்துவுக்கு மனைவி புண்ணியவதி, மகன் ஐசக் மாதவராஜன், மகள்கள் செல்வபுஷ்பா, எலிசபெத் மேரி, கவிதாஆகியோர் உள்ளனர்.
குமரிமுத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருப்பதாவது:–
தி.மு.க.வின் கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் துணைத் தலைவரும், சிறந்த நகைச்சுவைப் பேச்சாளரும், குணச்சித்திர நடிகருமான குமரிமுத்து இன்று காலையில் மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து திடுக்கிட்டேன்.
ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் குடும்பத்தினருடன் என்னை வந்து சந்தித்து, மருத்துவ மனையிலிருந்து உடல் நலம் பெற்று வீடு திரும்பி விட்டதாகவும், மருத்துவ மனையில் சிகிச்சை பெற உதவியதற்காக நன்றி தெரிவித்துவிட்டும் சென்றார்.
2014–ம் ஆண்டு செப்டம்பர் திங்களில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில், என் பெயரால் வழங்கப்படும், கலைஞர் விருது குமரிமுத்துவுக்கு வழங்கப்பட்டது. தன்னுடைய இளம் வயதிலேயே பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவினைக் கேட்டு, கழகத்தின் அபிமானியாக மாறியவர் இவர். திரைத்துறையில் புகழ் பெற்று விளங்கிய நடிகர் நம்பிராஜனின் உடன்பிறந்த தம்பி என்பதால் நடிகவேள் எம்.ஆர்.ராதா தனது நாடகக் குழுவில் இவரைச் சேர்த்துக் கொண்டார்.
இவருடைய சிரிப்பே இவரது புகழை அதிகப்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதால் “கலைமாமணி”, “கலைச் செல்வம்”, ஆகிய விருதுகளைப் பெற்றவர்.
பகுத்தறிவுப் பாசறையாம் திராவிடர் கழகம் இவருக்கு “பெரியார் விருது” வழங்கி கவுரவித்துள்ளது.
குமரி முத்துவின் மறைவினால் வருந்தும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், கழக உடன் பிறப்புகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்./












