மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ,காதல் மன்னன் ஜெமினி கணேசன் ,சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ,உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ்நடிகர்களுக்கும் ,பாலிவுட் சல்மான் ,அனில்கபூர் போன்றோருக்கும் பின்னணி பாடியவர் இளையநிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம். என்ஜினீயரிங் படித்துக்கொண்டே பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றிருக்கிறார்.
அப்படி பரிசுகள் பெற்றபோது நிகழ்ந்த ஒரு சம்பவம்.
பிரபல பின்னணிப்பாடகி எஸ்.ஜானகி பரிசு வழங்கி பாராட்டியிருக்கிறார். “நீ சினிமாவிலும் பிரகாசிப்பாய் “என்று அவர் அன்று வாழ்த்திய வாழ்த்து அவருடனேயே அதிக அளவில் பாடும் நிலைக்கு உயர்த்தியது “என நினைவு கூர்ந்தார் எஸ்.பி.பி.
பாலு திரையுலகில் கால் பதிப்பதற்கு உந்து சக்தியாக இருந்தவர் அவரது ரூம் மேட் முரளி .
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா படத்திற்குத்தான் அவர் முதன்முதலாக பாடல் பாடினார் .எஸ்.பி. கோதண்டபாணி என்பவர் இசை அமைத்திருந்தார். பாலுவின் வழி காட்டி இவர்தான்.
தமிழில் இவர் முதன்முதலாக பாடிய பாடல் வரிகள். “அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு “என்கிற பாடலை எல் ஆர் ஈஸ்வரியுடன் இணைந்து பாடியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்த அந்த பாடல் ‘ஹோட்டல் ரம்பா’ என்கிற படத்துக்காக. ஆனால் அந்த படம் பாதியிலேயே நின்று விட்டது.
“ஆயிரம் நிலவே வா ” “இயற்கையெனும் இளைய கன்னி ” என்கிற இரண்டு பாடலும் அவர் உயரம் செல்வதற்கு உதவியாக இருந்தன.
அமரர் எம்.ஜி.ஆர் இன்று உயிருடன் இருந்திருந்தால் எஸ்.பி.பியின் நிலையைப் பார்த்து துடித்துப்போயிருப்பார் .இதற்கு காரணம் இருக்கிறது.
“ஆயிரம் நிலவே வா பாடலை எஸ்.பி.பி.தான் பாட வேண்டும் “என்று விரும்பியவர் எம்.ஜி.ஆர். ஆனால் அந்த பாடலை பாலுவினால் பாட முடியாத அளவுக்கு காய்ச்சலினால் படுத்து விட்டார்.
எம்.ஜி.ஆர் நினைத்திருந்தால் வேறு பாடகரை வைத்து பாடலை முடித்து ஷூட்டிங் சென்றிருக்க முடியும். ஆனால் பாலுதான் பாட வேண்டும் என பிடிவாதமாக ஒரு மாதம் அந்த பாடலுக்கான படப்பிடிப்பை தள்ளி வைத்து விட்டார்.
ஒரு நாளைக்கு 15 பாடல்கள் பாடிய அனுபவமும் பாலுவுக்கு இருக்கிறது.
அந்த பாலுவை எப்படியும் காப்பாற்றி விடுவோம் என்கிற நம்பிக்கையுடன் வெளிநாட்டு டாக்டர்களும் வந்திருக்கிறார்கள்.
நமக்கும் நம்பிக்கை இருக்கிறது.
எல்லோரும் சொல்வதைப்போல “எழுந்து வாருங்கள் பாலு!” என மக்களும் சொல்லுகிறார்கள்.