பாலிவுட்டில் அனுபவ் சின்ஹா இயக்கத்தில், ஆயுஷ்மன் குரானா, நாசர்,மனோஜ் பாவா, இஷா தல்வார், சயானி குப்தா உட்பட பலர் நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி வெளியாகி,அங்கு பெரிய வரவேற்பை பெற்ற இந்தி படம் ஆர்டிகிள் 15.
ஒரு கிராமத்தில் இரண்டு ஏழை சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குப்பின் கொல்லப்பட்டு, மரக்கிளையில் தொங்க விடப்படுகிறார்கள். அதன் விசாரணையை முன்னெடுக்கும் அதிகாரிக்கு சாதியின் பெயரால் பல்வேறு தடைகள் வருகிறது. அதனால் அந்த அதிகாரி என்ன செய்கிறார் என்பதுதான் கதை.
இப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை நடிகை ஶ்ரீதேவியின் கணவரும் வலிமை படத் தயாரிப்பாளருமான போனி கபூர் வாங்கி இருந்தார். இப் படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித்,தனுஷ் என இருவரில் ஒருவர் நடிக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் இதில் கதாநாயகனாக நடிப்பது தற்போது உறுதியாகி இருக்கிறது.
இந்தப் படத்தை கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார். உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.