“என் உயிருக்கு உத்திரவாதத்தை மத்திய அரசு கொடுக்குமா? பாலிவுட்டில் போதை மருந்து புள்ளிகளை அடையாளம் காட்டுகிறேன்” என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத்.
இவரது தீவிரம் எங்கே கொண்டு போய் நிறுத்துமோ தெரியவில்லை.!
சுஷாந்த் சிங் மரணத்தில் மர்மம் இருக்கு என்று இவர் ஆரம்பித்து வைத்த பிரச்னை இன்று சி.பி.ஐ. விசாரணையில் வந்து நிற்கிறது.
சுஷாந்தின் காதலி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட நடிகை ரியாவை கொலைகாரி என்கிறார் சுஷாந்த் சிங்கின் அப்பா. மகாராஷ்டிரா அரசாங்கத்தின் உள்ளடி வெளிகளும் ஒரு காரணம் என்கிற செய்தியும் பரவலாகி வருகிறது. சுருக்கமாக சொன்னால் துப்பறியும் நாவலை படிக்கிற உணர்வு ஏற்படுகிறது சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான செய்திகள்.
பாலிவுட்டில் போதை வஸ்துகள் புழக்கம் சர்வ சாதாரணம் என்கிறார்கள். அதாவது மது ரகங்களை தவிர்த்து.!
“பாலிவுட்டின் பாப்புலர் கொக்கெய்ன் ” என்கிறார் கங்கனா .சர்வதேச அரங்கில் தடை செய்யப்பட்ட போதை பொருள்தான் கொக்கெய்ன் .
“பாலிவுட் பிரமுகர்களின் வீடுகளில் நடக்கிற பார்ட்டிகளில் கொக்கெய்ன் உண்டு. காஸ்டலியான சரக்கு.! பெரிய பெரிய ஆட்களின் வீடுகளுக்குப் போனால் ஃப்ரீ ! உங்களுக்குத் தெரியாமலேயே எம்டிஎம்ஏ கிரிஸ்டல்களை தண்ணீரில் கலந்து குடிக்கச்செய்து விட்டால் உங்களுக்கு காலம் நேரம் போவதே தெரியாது!”என்கிற அதிர்ச்சியான தகவலை சொல்கிறார் கங்கனா.பகீர் என்கிறது நமக்கு.!
மும்பை வரை வந்து விட்ட இந்த போதைப் பொருள் கோலிவுட்டிலும் இருக்குமா?
அந்த கேவலமான கலாசாரம் இங்கே இல்லை என்றே சொல்லலாம்?
கங்கனா மேலும் என்ன சொல்லியிருக்கிறார் என்பதுதான் அனைவரும் அடிக்கோடிட்டு கொள்ளவேண்டிய செய்தி.
“நார்கோடிக்ஸ் பீரோவுக்கு அதாவது போதைப்பொருள் கடத்தல் கண்டுபிடிக்கும் துறையினர் ,இவர்களுக்கு உதவி செய்ய நான் தயார். ஆனால் மத்திய அரசு எனது உயிருக்கும் தொழிலுக்கும் உத்திரவாதம் தருமா? என்னுடைய உயிருக்கு உலை வைக்கும் காரியம் இது. பாதுகாப்பு தருமா? இந்த கேவலமான ரகசியம் தெரிந்திருந்ததால்தான் சுஷாந்த் சிங் கொல்லப்பட்டார். நார்க்கோடிக்ஸ் பீரோ பாலிவுட்டுக்குள் புகுந்தால் முக்கியமான புள்ளிகள் சிறைக்கம்பிகளை எண்ணவேண்டியது வரும்” என்கிறார் கங்கனா .
ஒருவர் இவ்வளவு பகிரங்கமாக சொன்னபிறகும் துறை சார்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்?
நேர்மை ,நீதி ,நியாயம் என்பதெல்லாம் வெத்துக்காகிதமே!