தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தனது பிறந்தநாளை கொண்டாடினார்..
அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.ஆனால் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் சாந்திபுரம் பகுதியில் பவன் கல்யாணின் பிறந்தநாளையொட்டி 6 ரசிகர்கள் நேற்று இரவு 8.30 மணி அளவில் பேனர் வைத்துள்ளனர்.
பேனரின் இரும்பு கம்பி லைவ் வயரை தொடவே அந்த ஆறு பேருக்கும் ஷாக் அடித்திருக்கிறது.இதில் 3 பேர் உயிர் இழந்துவிட்டனர், 3 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் சோமசேகர்(30), அவரின் அண்ணன் ராஜேந்திரா(32) மற்றும் நண்பர் அருணாச்சலம்(28) என்று தெரிய வந்துள்ளது.இறந்துபோன ரசிகர்களின் குடும்பத்துக்கு நடிகர் அல்லு அர்ஜூன் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்திருப்பதுடன் தலா 2 லட்சம் வீதம் கொடுத்திருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்கப்படும் என்று ஜன சேனா கட்சியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து பவன் கல்யாண் கூறியிருப்பதாவது,’பலியான 3 பேரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பது என் கடமை என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் பவன் கல்யாணுக்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கியதில் 2 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது