தமிழ்நாட்டில் இந்தியை வலுக்கட்டாயமாக திணிக்கும் முயற்சி அமைதியாக நடந்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசு சார்ந்துள்ள துறைகளில் இந்தி மட்டுமே அறிந்த அதிகாரிகள் திணிக்கப்பட்டு இருக்கிறார்கள் .ஆங்கிலமோ இந்தியோ அறியாத அப்பாவி மக்களிடம் அவர்கள் நடந்து கொள்கிற அடாவடிகள் ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றன. இதை அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் அன்றாடம் பார்க்க முடிகிறது.
திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ,மற்றும் தமிழ்ப்பட இயக்குநர் வெற்றி மாறன் ஆகியோரிடம் இந்தி தெரிந்த மத்திய அரசு அதிகாரிகள் “இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா ?”எனக்கேட்டு இழிவு படுத்தியிருக்கிறார்கள்.
இது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
1965 -ல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த எம்.பக்தவத்சலத்தின் மொழிக்கொள்கை பற்றிய பேச்சினால் தமிழகத்தின் ஒட்டு மொத்த மாணவர் உலகமே கொதித்தெழுந்தது
70 கொல்லப்பட்டனர். திமுக வை சேர்ந்தவர்கள் தீயிட்டு தங்களை மாய்த்துக்கொண்டனர். 70 பேரை உயிர்ப்பலி கொண்டது ஆதிக்க இந்தி எதிர்ப்பு போராட்டம். இதன் விளைவு 1967 -ல் காங்கிரஸ் ஆட்சியின் அத்தியாயம் முடிவுக்கு வந்தது.
அன்றிலிருந்து இன்று வரை திராவிட இயக்கங்களை சார்ந்த கட்சிகளே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி வருகின்றன.
இதை மாற்றும் விதமாகவே மத்தியில் ஆள்கின்ற பாஜக.தமிழகத்தில் இந்தி ஆதிக்கத்தை திணித்துக்கொண்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திரைப்படத்துறையினரும் திமுகவினரும் இந்தி எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட டி.சர்ட்டுகளை அணிந்து கொண்டு வருகிறார்கள்.
“இந்தி தெரியாது போடா ” “நான் தமிழ் பேசும் இந்தியன் “என்பது போன்ற டி.சர்ட்டுகள் இன்றைய இளைஞர்களை கவர்ந்து வருகிறது. இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ,சிரிஷ் ,சாந்தனு பாக்யராஜ் ,மனைவி கீர்த்தி ,நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ,உள்ளிட்ட கட்சி சார்பற்ற இளைஞர்கள் அதிக அளவில் அணிந்து கொண்டிருக்கிறார்கள்.
தங்களது உணர்வுகளை இவ்விதம் தெரிவிப்பதற்கு பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் அவரது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.”டி.சர்ட்டுகள் மூலம் ஒருபோதும் தமிழை வளர்த்து விட முடியாது”என்று சொல்லியிருக்கிறார்.