கடந்த சில நாட்களுக்கு முன்பு நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் பாரதிராஜா 50 படத்தயாரிப்பாளர் கையெழுத்திட்ட ஒரு நீண்ட கடிதம் ஒன்றை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு எழுதிஇருந்தார். அதில் ‘திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் அந்த நாளில் திரையிடப்படும் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பங்கு கொடுக்க வேண்டும் .
ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வருவாயில் ஒரு பகுதியைத் தர வேண்டும்.பல திரையரங்குகள் சிலரால் குத்தகைக்கு எடுத்து நடத்தப்படுவதால் தயாரிப்பாளர்களுக்கான வியாபார சுதந்திரம் பறிபோவதால், இதுபோன்ற திரையரங்குகளில் படங்களைத் திரையிட முடியாது என்றும் குறிப்பிட்ட பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்,கூறுகையில், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் சில கோரிக்கைகளை முன் வைத்து, அதனை நிறைவேற்றாவிட்டால் புதிய படங்களை வெளியிட முடியாது எனக்கூறியுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஓடிடியில் படங்களை எங்களைக் கேட்டுக்கொண்டா வெளியிட்டார்கள்?விருப்பப்பட்டால் வெளியிடட்டும் , விருப்பமில்லை என்றாலும் விட்டுவிடட்டும். நாங்கள் படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.”ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச்”, “திருமண மண்டபம்” என நாங்களும் மாறிக் கொள்கிறோம். அவர்களுக்கு ஒரு வழி இருக்கும் போது, எங்களுக்கு ஒரு வழி கிடைக்காதா? எனக்கூறியுள்ளார்.