இன்னும் எட்டு மாதங்களே இருக்கின்றன தமிழகம் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு.!
“50 ஆண்டுகால திராவிட சாம்ராஜ்யத்துக்கு இப்போது முடிவு கட்டவில்லை என்றால் எப்போதுமே அது நடக்கப்போவதில்லை “என்கிற வஞ்சினத்துடன் தேர்தலை சந்திக்க இருக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இதற்காக அவர் கையில் எடுக்கப்போகும் ஆயுதம் ஆன்மீக அரசியல்!
ஆன்மீக அரசியலுக்கு ஆளுக்காள் அருத்தம் சொல்லி குட்டையை குழப்பி வருகிறார்கள் என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. .
திமுக பொதுச்செயலாளராக துரை முருகன் தேர்வு பெற்றதுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து சொன்னது கூட ஆன்மீக அரசியல் என்கிறார் ஒருவர். அதற்கும் ஆமாம் ஆமாம் என சிலர் தலையாட்டுகிறார்கள். . அது ஒரு அரசியல் நாகரீகம் , அந்த நாகரீகம் எல்லா கட்சித்தலைவர்க்குமே இருக்கிறது .திராவிடர் கழக வீரமணி கூட வாழ்த்து சொல்கிறார் என்றால் அது ஆன்மீக அரசியலா? இதில் என்ன ஆச்சரியம் என்றால் ரஜினியின் வாழ்த்தினால் திமுக திகிலடைந்து இருக்கிறது என்றும் சொல்கிறார்கள் ,. இதுதான் நமக்கு புரியவில்லை.
ஆன்மீக அரசியலுக்கு கோனார் விரிவுரை ,விளக்கவுரையை சொல்கிற வரை பிரச்னை ஓயப்போவதில்லை.இது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சொன்ன அண்ணாயிசம் மாதிரிதான்.!
இரண்டு வலுவான திராவிட இயக்கங்களை தேர்தல் களத்தில் ஒரு அறிமுக கட்சி சந்திப்பது என்பது சாதாரணமானது அல்ல. ஆனால் திமுகவை எம்.ஜி.ஆரின் அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் சந்தித்ததை ரஜினியின் கட்சியுடன் ஒப்பிட முடியாது.
திமுகவை விட்டு எம்.ஜி.ஆர் தனது மன்றங்களின் வேருடன் பிரிந்து வந்து முன்னணித் தலைவர்களுடன் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றவர் என்பதை மறந்து விடக்கூடாது. இரவு பகலாக மக்களை சந்தித்துப்பேசியவர் மக்கள் திலகம். குறைந்த பட்சம் உலக நாயகன் கமல்ஹாசன் அளவுக்காவது ரஜினி சுற்றுப்பயணம் செய்தாக வேண்டும்.
ரஜினியைத் தவிர இரண்டாம் கட்டத்தலைவர்கள் யார் என்பதை அடையாளம் காட்ட இயலவில்லை. . ரஜினியை மக்கள் நம்புகிறார்கள். அதுவே அவரது பலம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதும் உண்மை பொய்யான வாக்குறுதியை எந்த கட்சி கொடுத்தாலும் நம்புவார்கள் என்பதும் உண்மை.இத்தகைய சூழ்நிலையில்தான் மிகப்பெரிய ஆயுதமான பணத்தை ஏறக்கப்போகிறார்கள் என்கிற யதார்த்தமும் நடக்கப்போகிறது. . பிஜேபி நிற்கிற ஒரு தொகுதிக்கு ஆறரை கோடி ரூபாய் வீதம் செலவு செய்யலாம் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதிமுக ,திமுக இரண்டுமே தங்களது பிரசாரத்தை சோசியல் மீடியா வழியாக தொடங்கிவிட்டார்கள். பேஸ்புக் ,டிவிட்டர் ,யூ டியூப் ஆகிய மிக வலுவான சாதனங்களை கையில் எடுத்துக்கொண்டு அதற்காக மிகப்பெரிய தொகையை செலவு செய்து கொண்டு இருக்கிறார்கள்.
எஸ்.எம்.எஸ். என்பது அதிமுகவின் பிரசார சாதனத்தின் பெயராம். இதற்கு என்ன விரிவாக்கம்?
எஸ், என்பது சத்யமூர்த்தி ,இவர் ஒய்வு பெற்ற உளவுத்துறை டிஐஜி . எம், என்பது முதல்வர் எடப்பாடியாரின் மகன் மிதுனை குறிக்கும் .மற்றொரு எஸ் என்பது சுனிலை குறிக்கும் .இவர் ஜெயா டி .வி.யில் முதன்மை அதிகாரியாக இருந்தவர் . இந்த மூவர் குழுதான் எஸ் எம்.எஸ் .
திமுகவின் சோசியல் மீடியாவை கவனிப்பது ஐபேக் என்கிற நிறுவனம் . இந்த நிறுவனம்தான் காணொளி வழியாக திமுகவின் பொதுக்குழுவை நடத்தி மிகப்பெரிய பாராட்டுகளை அள்ளியிருக்கிறது. இதை முன்னனின்று வழி நடத்துவது திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் மருமகன் சபரீசன் என்கிறார்கள்.
மக்கள் நீதி மய்யம் திராவிட கட்சிகளுக்கு முன்னதாகவே தன்னுடைய சோசியல் மீடியாவை முன்னெடுத்து சென்று விட்டது .
ஆள்கிற கட்சியாக முதலில் நிற்பது அதிமுக. இந்த கட்சியைப்பற்றி சுருக்கமாக பார்க்கலாம் .இந்த கட்சியில் எடப்பாடி பழனிசாமி ,ஓ.பன்னீர் செல்வம் என இரண்டு பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கிடையில் நடந்த பலப் பரிட்சையில் இபிஎஸ் கை ஓங்கிவிட்டதாக உளவுத்துறையை சேர்ந்த ஒருவர் சொல்கிறார். மாவட்டச் செயலாளர்களில் கணிசமானவர்களின் ஆதரவு முதல்வருக்குத்தான் என்கிறார்கள். இதனால் தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் கணிசமானவர்கள் பழனிச்சாமியின் ஆதரவாளர்களாகத்தான் இருக்க முடியும்.
ஆனால் அக்டொபர் அல்லது நவம்பரில் சசிகலாவின் விடுதலை இருக்கும் .அதன்பின்னர் அதிமுகவின் நிலையில் மாற்றம் வரலாம் என்பது எதிர்பார்ப்பு. தற்போதைய அமைச்சர்களில் சசிகலா சிபாரிசு பண்ணி மந்திரிபதவியில் அமர்ந்தவர்கள்தான் .இவர்களது ஜாதகமே சசியின் கையில்தான். அதனால் உண்மையான சிலீப்பர் செல்கள் யார் என்பது இந்த எபிசோடில்தான் தெரியும் .சசியினால் தேர்தலில் நிற்கமுடியாதே தவிர அடுத்தவரை மண்டியிட்டு வணங்க வைக்கும் தந்திரம் தெரியும்.
திமுக மீண்டும் அரசை கைப்பற்றி விடக்கூடாது என்கிற முனைப்பில் அதிமுகவும் ,ஆண்ட கட்சியான அதிமுகவின் கைகளில் மீண்டும் அரசு போய் விடக்கூடாது என்கிற வெறியில் திமுகழகமும் கடுமையான உத்திகளுடன் தேர்தலை சந்திக்கும் என்பதில் சந்தேகம் மில்லை.
நீங்கள் இரண்டு பேருமே வரக்கூடாது .ஒரு மாற்றம் வேண்டும் என்றுதானே நானே அரசியலியல் குதித்திருக்கிறேன் என்று ரசிகர்களுடன் களத்தில் குதிக்கப்போகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினி.
ஆக 2021 நடக்கக்கூடிய தேர்தல் கூட்டணி மாற்றங்களுடன் நடக்கக்கூடிய குருசேத்திர போராகவே இருக்கும்.சந்தேகமே இல்லை. இன்னொன்றையும் கவனிக்க வேண்டும் .
“மோடியும் ,அமித் ஷாவும் கிருஷ்ணன் ,அர்ஜுனன் மாதிரி .இவர்களில் யார் அர்ஜுனன் ,யார் கிருஷ்ணன் என்பதை சொல்ல முடியாது” என்று அமித்ஷா முன்னிலையில் சொன்னவர் ரஜினிகாந்த் என்பதை மறந்து விடாமல் தேர்தல் அணி மாற்றங்களையும் கவனித்தாக வேண்டும்.
இவ்வளவுக்கு மத்தியில் நடக்கவிருக்கிறது தமிழக சட்டசபைத் தேர்தல்.
மிகப்பெரிய சர்வாதிகாரி ஹிட்லர் சொன்னது நினைவுக்கு வருகிறது.
“பிரச்னைகள் இல்லாமல் ஜெயித்தால் அது விக்டரி . அதிகமான பிரச்னைகள் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றால் அது ஹிஸ்டரி ” என்றான்.
இங்கே ஹிஸ்டரி படைத்தால் ஆட்சியில் அமரலாம் ,விக்டரி பெற்றால் எதிர்க்கட்சியாக உட்காரலாம்.