தயாரிப்பாளர்கள் சங்கம் -தியேட்டர் அதிபர்கள் சங்கம் இடையேயான மோதல் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை.
பார்சன் காம்ப்ளக்சில் இருக்கிற இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சொந்த அலுவலகத்தில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகம், இன்று திறக்கப்பட்டது.திறப்பு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களின் சந்திப்பு நடந்தது.
சூடாகத்தான் இருந்தது. சிங்கம் கிளம்பிருச்சு !
“தியேட்டர்களை திருமண மண்டபமாக மாற்றி விடுவோம்” என்று தியேட்டர்கள் அதிபர்கள் சங்கத்தின் ஒரு பிரிவுத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் சொல்லியிருந்தார் .
இதற்கு பதிலடி இன்று கிடைத்தது .பாரதிராஜாவின் காட்டமான பதிலுக்கு எதிர்தரப்பிலிருந்து எந்த வகையான ஏவுகணை வீசப்படும் என்பது தெரியவில்லை.
“கொரோனா ஊரடங்கால் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து விடுபடவும், புதிய படங்களின் வெளியீட்டின் போது ஏற்படும் நஷ்டங்களை,சிக்கல்களைக் களைவதற்கும் இச்சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவர்களுக்காகவே பாடுபடும்.
திரையரங்குகளில் புதிய படங்களை திரையிட, தியேட்டர் அதிபர்களுக்கு நாங்கள் வைத்த கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்?
திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.
ஆனால் நீங்கள் சில விஷயங்களை அடாவடித்தனமாக செய்யும்பொழுது நாங்களும் பேசிப் புண்ணியமில்லை. எங்களுக்கும் வேறு வேறு திசைகள் இருக்கிறது வழிகள் இருக்கிறது தொழில் சுதந்திரம் இருக்கிறது .
இந்த பொருளை இவர்களுக்குத்தான் விற்கவேண்டும் என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. என் பொருளை யாருக்கு வேண்டுமானாலும் விற்பேன். இது வியாபாரம்.
நீங்க கல்யாண மண்டபம் கட்டிக்கலாம். மாநாடு நடத்திக்கலாம் அது உங்க உரிமை.உங்க கட்டிடம். நாங்கள் திரைப் படங்களை திரையிட்டால் தான் அந்த திரையரங்குக்கு பெருமை. அப்படி திரையிடப்படும் படங்களுக்காகத் தான் மக்கள் வருகிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.
எங்கள் கோரிக்கைகளை உங்கள் இடத்தில் வைத்து விட்டோம். பேச்சு வார்த்தைக்கும் தயாராக இருக்கிறோம்.நாங்கள் சங்கம் தொடங்கியது உங்களுடன் சண்டை போடுவதற்காக அல்ல. ‘ஓடிடி’ தளத்துக்கு செல்வதற்குத் தான் திரையரங்கு உரிமையாளர்களிடத்தில் கோரிக்கை வைத்திருப்பதாக சொல்வதில் எந்த உண்மையும் இல்லை.
நாங்கள் உங்களிடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறோம். ஏற்கவில்லை என்றால் எங்கள் நலன் கருதி ஓடிடி தளங்களுக்கும் செல்வோம்.
நாளையே விஞ்ஞான வளர்ச்சியில் சினிமா உலகத்துக்கு இதைவிட வேறு தொழில் நுட்பம் வரலாம். தியேட்டருக்கு வருவதற்கு மக்கள் தயாராக இல்லை என்று சொல்கிறீர்கள்.
நாங்கள் எங்க படத்தை திரையிட்டு, மக்கள் வரவில்லையே என அழுதுகிட்டு உட்கார்ந்து கிடக்க முடியுமா? நடிகர்களுக்கு சம்பளமாக ரூ .100 கோடி கொடுப்போம்,ரூ. 200 கோடி கொடுப்போம். அதை சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை.இது வியாபாரம்.
எந்த நடிகருக்கு எவ்வளவு வியாபாரம் இருக்கிறது என்பதை பொறுத்து எடுக்கப்படும் முடிவு இது. இவ்வளவு பணத்தை போட்டால் எவவளவு வியாபாரம் ஆகும் என்பது பிசினஸ்”என்றார் இயக்குனர் இமயம்.
இந்த காட்டம் வேணுமா ,இன்னும் கொஞ்சம் வேணுமா?
திருப்பூர் சுப்பிரமணியம் ,தியேட்டர் ஸ்ரீதர் என்ன சொல்லப்போகிறார்களோ!
காத்திட்டிருக்கிறோம் ,அய்யாமார்களே