ஆந்திராவின் மிகப்பெரிய இணைய தளத்தில் போஸானி கிருஷ்ணமுரளி என்கிற சர்ச்சைக்குரிய எழுத்தாளர் எழுதியதை படித்தபோது பேரதிர்ச்சியாக இருந்தது.
சாதனை படைத்த மனிதர்களில் மதிப்பிற்குரிய என்.டி .ராமராவ் ஒருவர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாணியில் தனிக்கட்சி தொடங்கி ஆட்சி அமைத்தவர் .தேசிய அளவில் மிகப்பெரிய கூட்டணி அமையக்காரணமாக இருந்தவர்களில் என்.டி.ஆரும் ஒருவர். எம்.ஜி.ஆர் உடலம் குன்றி சிகிச்சை பெற்று வந்த காலத்தில் அவருக்காக தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்தவர்.
தந்தை .அல்லது சகோதரனை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றிய முகலாயர்களைப்போல இவரை வீழ்த்தி ஆட்சியை-கட்சியை கைப்பற்றியவர் சொந்த மருமகன்.ராமாராவின் மகளை மணந்து கொண்ட மணாளன். சந்திரபாபு நாயுடு!
சரி ,இந்த பழைய கதை எதற்கு என்று கேட்கலாம்.
காரணம் இருக்கிறது.!
போஸானியின் கட்டுரைதான் காரணம்.!
“ராமராவுக்கு வில்லன் சந்திரபாபு நாயுடுதான் “என்கிறார்.
மூன்று முறை முதல்வராக இருந்தவர் என்.டி .ராமராவ்.
பிள்ளைகள் 12 பேர். ஆண் 8. பெண் 4.
இருந்தும் என்ன?
“குறித்த நேரம் காலத்தில் அவருக்கு உணவு ,மருந்துகள் கொடுக்க ஆள் இல்லை!”என்கிறார் அமர்நாத் மேனன் .இந்தியாடுடே சீனியர் பத்திரிகையாளர். அவருக்கு யார் பணிவிடை செய்தார்கள் என்பது தெரியவில்லையாம். கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தார் என்கிறார் பத்திரிகையாளர்.
சில நேரங்களில் டிபன் கேரியரில் வருமாம் .ரேணுகா சவுத்ரி அனுப்புவார் என்கிறார்.
இத்தகைய காரணங்களால்தான் என்.டி.ஆர் .இரண்டாவதாக அந்த 70 வயதில் லட்சுமி பார்வதியை கல்யாணம் செய்து கொள்ள நேர்ந்தது என்கிற தனது கருத்தினை பதிவு செய்கிறார் போஸானி .
“அவர் செக்ஸ்க்காக கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு ஒருபெண்தான் தேவை என்றால் 16 வயது பருவக்குமரிகளில் ஒருவரை கல்யாணம் செய்து கொண்டிருக்க முடியும்.ஒரு நாளைக்கு 5 லட்சம் கூட அவரால் கொடுக்க இயலும்.!அது அவருக்கு மிகவும் சாதாரணம்.
லட்சுமி பார்வதி 40 வயதினை கடந்தவர். கணவன் ,மகன் இருக்கிறார்கள். சமூகத்தினால் மதிக்கப்படுகிறவர்கள். லட்சுமிபார்வதி படித்தவர்.அவரின் மனப்பக்குவம், பழகிய விதம் என்.டி.ஆருக்குப் பிடித்திருந்தது. இவருக்குப் பிடித்தமான பாடல்களைப் பாடுவார்.. புத்தகங்களை படித்துக்காட்டுவார். சர்க்கரை நோய்க்கான மாத்திரை மருந்துகளை நேரம் தவறாமல் கொடுப்பார். இலக்கிய விவாதம் நடக்கும். என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை எழுதுகிறபோது அவரது வாழ்க்கைப்போராட்டங்களை லட்சுமியினால் தெரிந்து கொள்ள முடிந்தது.
லட்சுமியின் பழகும் முறை ,பணிவிடை பாங்கு என்டிஆருக்கு பிடித்துப்போனது. தனது இறுதிக்காலம் இவரது ஆதரவில்தான் நன்றாக இருக்க முடியும் ,அமைதியாக வாழமுடியும் என்பதினால் என்.டி .ஆர் புரபோஸ் பண்ணினார்.இது லட்சுமி பார்வதிக்கு அந்த நேரம்வரை தெரிந்திருக்கவில்லை.
இந்த திருமணம்தான் சந்திரபாபு நாயுடுவுக்கு வசதியாகிவிட்டது . ஆட்சியைக் கைப்பற்ற !”
இவ்வாறு போஸானி கூறியிருக்கிறார் .