Kadhalum Kadandhu Pogum
Rating :
(3/ 5)
Directed by :Nalan Kumarasamy
Casting :Vijay Sethupathi,Madonna Sebastian,Samuthirakani
Music :Santhosh Narayanan
Produced by :Thirukumaran Entertainment
Review
‘சூதுகவ்வும்’ படத்தின் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்ற இயக்குனர் நலன் குமரசாமி இயக்கியுள்ள படம் ‘காதலும் கடந்து போகும்’. விஜய் சேதுபதியுடன் ‘பிரேமம்’ படத்தில் ரசிகர்களின் மனதை மடக்கிப்போட்ட மடோனா செபஸ்டியன் இணைந்து நடித்துள்ளார். ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப்படம் அதை பூர்த்தி செய்துள்ளதா..?
ஊளை உதார் விட்டுக்கொண்டு ஊரைச்சுற்றி வரும் ரௌடி! விஜய்சேதுபதியின் ஒரே லட்சியம், சொந்தமாக ‘BAR’ எடுத்து நடத்துவது. இதற்காக பல ‘BAR’ களை எடுத்து நடத்தி வரும் G.M. சுந்தரிடம் எடுபிடி வேலைகள் செய்து வருகிறார். பெற்றோர்களின் அரை குறை சம்மதத்துடன் விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு வருகிறார் கம்ப்யூட்டர் எஞ்சினியர் மடோனா செபஸ்டியன். இந்த இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் சேரும்போது இவர்களுக்கிடையே என்ன நடக்கிறது? என்பதை இயக்குனர் நலன்குமரசாமி காட்சிப் படுத்தியுள்ளார்.
‘BAR’ல் நடக்கும் தகராறை தீர்த்துவைக்க விஜய் போல கிளம்பியவர் ‘கைப்புள்ள’ வடிவேலாக திரும்பிவரும் காட்சியின் போது ஏற்படும் சிரிப்பு தியேட்டரை திருப்பிபோடும் சூப்பர் ஸீன். அதேபோல் ரெஸ்ட்டாரண்டில் பணம் வசூலிக்க கெத்துக்காட்டி சமுத்திரக்கனியிடம் அறைவாங்கும் காட்சியும் சூப்பர். முதல் கொலை செய்யப்போகும் அப்பாவி இளைஞனை அறிவுரை சொல்லி அடித்து விரட்டும் காட்சியில் நெகிழ்ச்சியாகவும், ரொமேன்ஸ் காட்சியில் ரோமியோத்தனமாகவும் எங்கெங்கு கானினும் விஜய் சேதுபதி.
தொடர்ந்து கோலிவுட்டில் ஆட்சி செலுத்திவரும் சேச்சிகளின் வரிசையில் இன்னொரு சேச்சி மடோனா செபஸ்டியன்! முத்தான முதல் அறிமுகம்! சாராயக் கிறுக்கு தலைக்கேறி விஜய் சேதுபதியை கட்டிபிடித்து தூங்கிவிட்டு காலையில் அதிர்ந்து ஓடும்போதும், ‘அவன் கூட படுத்தால் தான் வேலையாம்’ என விஜய்சேதுபதியிடம் குமுறும்போதும் நடிக்கத் தெரிந்த தெளிவான நடிகையாக தெரிகிறார். விஜய்சேதுபதியுடன் நடிக்கும் நடிகைகள் அனைவருமே ( திரையில் ) அவருடன் நெருக்கமாகிவிடுகிறார்கள்! என்ன செய்கிறாரோ தெரியவில்லை!
இயல்பாக நடிக்கத்தெரிந்த G.M.சுந்தரை இயக்குனர்கள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளவேன்டும். ஒருசில காட்சிகளில் வந்தாலும் சமுத்திரக்கனி தனி கெத்து… காட்டியிருக்கிறார். மற்ற நடிகர்களின் நடிப்பும் பாராட்டும்படியாகவே உள்ளது. சமுத்திரக்கனியை கொலை செய்யப்போகும் காட்சி திக்.. திக்.. திகில் காட்சி.
படம் முழுவதும் வசனங்கள் வாள் வீசுகிறது. சந்தோஷ் நாராயணனின் பாடல்களும், பின்னணி இசையும் பிரம்மாதம். இசையால் படம் ஒரு படி மேல் என்றால், தினேஷ் கிருஷ்ணன் சின்ன அறைக்குள்ளும் சின்ன இடங்களிலும் ஒளிப்பதிவு செய்த அவருடைய நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு இன்னொரு படி மேல். இந்த இருவரும் சேர்ந்து படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அழகு படுத்தியுள்ளனர்.
இன்டர்வியூ நடக்கும் இடத்தில் விஜய்சேதுபதி செய்யும் ரகளை உட்பட சிலக்காட்சிகள் நெருடத்தான் செய்கிறது. எடிட்டர் லியோ ஜான் பால், விஜய்சேதுபதி குடை வாங்கச்செல்லும் காட்சியில் தூங்கியிருக்கிறார். இப்படி சில குறைகள் இருக்கிறது. இருந்தாலும், இருவேறு சூழ்நிலையில் இருந்து வந்த அவர்களின் அழகான காதலை அற்புதமாக படமாக்கியதுடன், தனது தெளிவான, மிதவேகமான திரைக்கதையுடன் சொன்ன நலன்குமரசாமி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்துள்ளார்.
‘My Dear Desperado’ என்ற கொரியன் படத்தில் காணாமல் போயிருந்த உயிர்ப்பை இந்தப்படத்தில் கொண்டுவந்த இயக்குனர் நலன்குமரசாமி பாராட்டத்தக்கவர்.