நடிகர்கள் : விஜயசேதுபதி ,ஐஸ்வர்யா ராஜேஷ், வேல.ராமமூர்த்தி ,பூ ராம், முனீஸ்காந்த், ரங்கராஜ் பாண்டே.
எழுத்து இயக்கம்:பெ.விருமாண்டி, பாடல்கள்: கவிஞர் வைரமுத்து ,இசை:ஜிப்ரான், வசனம்: சண்முகம் முத்துசாமி ,
ஒளிப்பதிவு: ஏகாம்பரம் . தயாரிப்பு :கொட்டப்பாடி ராஜேஷ் .
*****************************************************************
களம் : வறட்சி மாவட்டம், ராமநாதபுரம் ,கீழத்தூவல் .
கதை : உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட, போர்க்குணம் உள்ள கணவன் -மனைவியை அடித்தளமாகக் கொண்டது.நாட்டு நிகழ்வுகள் பக்க பலம்.
கீழத்தூவலில் நீரோட்டம் பார்ப்பவர் ரணசிங்கம்.( விஜயசேதுபதி.) வேல.ராமமூர்த்தியின் நிலத்தில் நீரோட்டம் பார்க்கிறபோது இவரது மகள் அரியநாச்சியின் ( ஐஸ்வர்யா ராஜேஷ் ) அறிமுகம் கிடைக்கிறது. ஊர் பிரச்னைகளில் தலையிட்டு நல்ல பெயர் எடுத்திருக்கிற ரணசிங்கம் குண்டாறு-மலட்டாறு திட்டத்தை முன்னெடுக்கிறார். அரியநாச்சியை கலியாணம் செய்து கொண்டதால் அவளது அறிவுரையின்படி துபாய்க்கு போகிறார் வேலை பார்க்க.!
போராட்டத்தில் கலந்து கொண்டதால் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ரணசிங்கம் இறந்துபோனார் என்கிறது துபாய் கம்பெனி.
இல்லை இல்லை ,தொழிற்சாலையில் நடந்த விபத்தில்தான் செத்தார் என்கிறார் சக தொழிலாளி.
எப்படி செத்தார் என்பதை துபாய் கம்பெனி மறைக்கிறது என்பதை நன்குணர்ந்த மனைவி அரியநாச்சி தனக்கு கணவரின் உடல் வேண்டும் என்று தன்னந்தனியாக போராடுகிறாள் ,அரியநாச்சி.!
முடிவு என்ன என்பதுதான் கிளைமாக்ஸ். அந்த உச்சக்கட்ட காட்சியில் கல்லும் கசியும்.தனி மனுஷியாக போராடுகிற ஐஸ்வர்யா ராஜேஷுக்கு செமத்தியான வேடம். சேலஞ்ச் பண்ணி நடித்திருக்கிறார். வாழ்த்துகள் .கலெக்டர் ரங்கராஜ் பாண்டே அந்த இறுதிக்காட்சியில் “கலெக்டராக இல்லாமல் ஒரு அண்ணனாக எந்த உதவியும் செய்கிறேன்மா!” என்கிறபோது ஐஸ்வர்யாவின் பார்வையில்தான் எத்தனை இளக்காரம்,ஆத்திரம். “எவன் பொணத்தையோ குடுத்துட்டு, கடைசியில உங்க கணக்கை முடிச்சுடீங்களேடா தேவிடியா பசங்களா… ” என்கிறபோதுதான் அந்த கேரக்டர் முழுமையடைகிறது. இயக்குர் விருமாண்டி ,வசனகர்த்தா சண்முகம் முத்துசாமி இருவரின் உழைப்பும் கிளைமாக்சில் பளீரிடுகிறது.கண்களை பிழிந்துவிடுகிறது.
மேரேஜ் சர்டிபிகேட்டுக்காக அரசு அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாக ஐஸ்வர்யா படையெடுக்கிறபோது அரசு அதிகாரிகள் எவ்வளவு திமிருடன் நடந்து கொள்கிறார்கள் என்பதை செவிட்டில் அறைந்து சொல்லியிருக்கிறார்கள்.இப்படி பல காட்சிகள். ஏழைகளுக்காக அரசும் நீதிமன்றமும் இல்லை என்பது இயக்குநரின் அழுத்தமான கருத்து. அதற்கான காட்சிகளும் வசனங்களும் வெகு இயல்பு.
உதாரணமாக ரணசிங்கம் இறந்து பத்து மாதங்களுக்கு அதிகமாகிவிட்ட நிலையில் அவரது சவத்தை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் சிக்கல். ஆனால் நடிகை ஸ்ரீ தேவியின் சவம் சில நாட்களிலேயே தாயகம் வந்து விடுகிறது. நாசூக்காக ,நாகரீகமாக சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். பாராட்டலாம்.
ஆனால் துபாய் தனியார் நிறுவனம் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ரணசிங்கம் மாண்டதாக சொல்கிறது. இது தொடர்பாக அந்த நாட்டு அரசு என்ன சொல்கிறது? அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்கிற ஐ விட்னஸ் இருக்கிறபோது நம்நாட்டு தூதுவர் கடமை என்ன ,அந்த அரசின் நிலை என்ன? பிரதமர் தலையிட்டு ரணசிங்கத்தின் உடல் கொண்டு வந்தபிறகு முறைப்படியான போஸ்ட் மார்ட்டம் நடந்திருக்க வேண்டாமா? துபாய் அரசும் ஊழல் அரசுதானா?அணைக்கட்டு திறக்க வருகிற பிரதமர் அங்கேயே அமர்ந்து தர்ணா நடத்துகிற தோரணையில் நடந்து கொள்வாரா?அவரை உயர்த்திக்காட்ட ஆசைப்பட்டிருக்கிறார் இயக்குநர் .பதானி நிறுவனம் ஆள் எடுக்கும் காட்சியில் ரணசிங்கம் நீரோட்டம் காண்பது இயல்புடன் இல்லை.
இப்படி பல குறைகள் இருந்தாலும் காட்சி ஓட்டத்தில் மறந்து விடுகின்றன.
ரணசிங்கம் கேரக்டர் விஜய்சேதுபதிக்கே உரியது .நிச்சயதார்த்த காட்சியில் “உன்னை நம்பி வந்தா என்ன தருவே?” என்று ஐஸ்வர்யா கேட்டதற்கு காதருகில் நெருக்கமாக நீ போதும் போதும்ங்கிற அளவுக்கு புள்ள பெத்துக்கலாம்” என்பது செம குறும்பு.!
க/பெ .ரணசிங்கம் .பார்க்கலாம் .சினிமா முரசம் மார்க்: 4/ 5