“நான் அந்தாளை காதலிக்கல. ஆனா என்னோட வீட்டு நிலைமை தெரியும். என் புருஷன் கிட்ட தினமும் நான் அடி ,உதை வாங்கிறது அந்தாளுக்கு தெரியும். ஒரு நா ரெண்டு நாளா, அஞ்சு வருசமா வாங்கி உடம்பே இத்துப் போயிருக்கேன். ஒரு நா ராத்திரியிலே கர்ப்பிணி பொண்ணுன்னு கூட பாக்காம வயித்தில எட்டி உதைச்சார் எம்புருஷன். கரு கலைஞ்சிருச்சு. அதுக்கு பிறகு அடிக்கடி ஆஸ்பத்திரிதான். கட்டாயமா உறவு வச்சுக்குவார் .கர்ப்பம் ஆவேன். அடி மிதியில கலைஞ்சி போயிரும்.என் மாமியாரும் மகன் பக்கம்தான். எத்தனை வாட்டி பஞ்சாயத்து வச்சும் பிரச்னை தீரல. தலைவிதியும் மாறல. இந்த சமயத்துலதான் அந்தாளு இரக்கப்பட்டு என்னை ஓடிப்போயிடலாம்னு கூப்பிட்டார். வேற வழி தெரியல. நா அந்த ஆளை காதலிக்கவும் இல்ல. ஒட்டிட்டேன்.இந்த நரகத்திலே இருந்து தப்பிக்கணும்தான் அவரோடு போனேன்” ஒரு அபலைப்பெண்ணின் ரத்தக்கண்ணீர் வாக்குமூலம்தான் இது.!
கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது .மழிக்கப்பட்ட தலை. உடல் முழுவது காயம். ஒட்டுத்துணி கூட உடலில் இல்லாமல் ஒரு நாள் ராத்திரி முழுவதும் மண் தரையில் படுத்துக்கிடந்திருக்கிறாள் .
அருணாசலம் பிரதேசத்தில் வாழ்ந்த அந்த பெண் கட்டிய கணவனின் கோர நடவடிக்கை காரணமாக அசாமுக்கு தப்பி ஓடி விட்டாள் அந்தப்பெண்.
எந்த பெண்தான் தினமும் அடி உதை மிதி என வாழ்வாள்? புருஷன் ஆசைப்படும்போது மட்டும் அவனுடன் படுத்து சுகம் கொடுக்க வேண்டும்.,அதிலாவது அவளுக்கு இன்பம் கிடைத்திருக்குமா? விறகுக்கட்டையாய் கிடக்கிறவளுக்கு என்ன சுகம் கிடைத்திருக்கப் போகிறது?
பிறகேன் அடுத்தவனை நம்பி ஓட மாட்டாள்! அவள் உயிர் வாழ்ந்தாக வேண்டும். அடுத்தவன் “கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று சொன்னபோது அதற்கும் மறுத்திருக்கிறாள் அந்த புண்ணியவதி.
ஓடியவர்களை தேடிப்பிடித்த ஊர்க்காரர்கள் ஆசை வார்த்தை சொல்லியிருக்கிறார்கள்.
“இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் ” என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.
நம்பி ஒரு நாள் நள்ளிரவு சொந்த ஊருக்கு திரும்பிய அவர்கள் வண்டியில் இருந்து இறங்கியதுமே ஆரம்பமாகி இருக்கிறது அர்த்த சாம பூஜை.
ஒரு கிழவி அந்தப்பெண்ணின் கையைப்பிடித்து இழுத்து தரையில் வீசி இருக்கிறாள். கட்டியிருந்த சேலையை உருவி ,அணிந்திருந்த ஜாக்கெட்டை கிழித்து எறிந்து விட்டாள் . இன்னொரு கிழவி அந்தப்பெண்ணின் தலையில் ஒரு முடி கூட இல்லாமல் மொட்டை அடித்து விட்டாள் .நாடு இரவு என்றும் பாராமல் குளிர்ந்த தண்ணீரை குடம் குடமாக அவள் மீது கொ ட்டியிருக்கிறார்கள்.
அழைத்து சென்றிருந்தவனுக்கும் அடி,உதை !
இருவர்க்கும் உணவு தண்ணீர் கொடுக்கவில்லை.
ஊருக்கு ஊர் கிராம சபை என்று இருக்குமே ,அது கூடி விசாரித்தது.
“அந்த பெண்ணை ஊரை விட்டே ஒதுக்க வேண்டும் .ஊருக்குள் வரக்கூடாது .அவளை யாரும் கல்யாணம் செய்யக்கூடாது. “என்று முடிவு செய்து விரட்டி விட்டனர். அந்த பெண்ணின் தாத்தா நியாயம் கேட்டதற்கு 40 ஆயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பி விட்டார்கள்.
நமது ராமராஜ்ய போலீஸ் வழக்குப்பதிவு செய்து 38 குற்றவாளிகளில் 13 பேரை மட்டும் கைது செய்திருக்கிறது.
வாழ்க பாரத மணித்திருநாடு!