திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கொரோனா கால சிறப்பு நிவாரணத் திட்டமாக கியூப் நிறுவனம் பழைய கட்டணத்தில் இருந்து தொகையை 50 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.
தியேட்டர்களில் புதிய படங்களை திரையிட கியூப் முறை தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கியூப் ஒளிபரப்புக்கான கட்டணத்தை அந்த நிறுவனங்கள் திடீரென அதிகரித்தது.இதை யடுத்து பட அதிபர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் அந்த நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
அந்நிறுவனகளுக்கு எதிராக போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது ஏற்கனவே வசூலித்த பழைய கட்டணத்தில் இருந்து தொகையை 50 சதவீதம் வரை குறைப்பதாக கியூப் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கியூப் நிறுவனங்கள் சார்பில் விட்டுள்ளஅறிக்கையில், “தயாரிப்பாளர்களுக்குச் கரோனா கால சிறப்பு நிவாரணத் திட்டத்தை கியூப் அறிவிக்கிறது. இதன்மூலம் ஊரடங்குக் காலத்தில் படங்களைத் திரையிட உதவியாக இருக்கும். இந்தத் திட்டம், நிதிச்சுமையைக் குறைத்து வருவாயை அதிகரிக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதால் திரையரங்குகளில் புதிய படங்கள் அதிகமாக வெளியாகும். மீண்டு வரும் இந்தக் காலக்கட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என கியூப் நிறுவனம் எண்ணுகிறது. கரோனாவால் நிதிச் சிக்கலில் உள்ள தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.இதன்மூலம், புதிய படங்களின் விபிஎஃப் கட்டணம் தற்போதைய கட்டணத்திலிருந்து 50% குறைக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 7 காட்சிகளுக்குத் திரையிடப்படும் படங்களுக்கு இந்தத் தள்ளுபடி அமலாகும். திரையரங்குகள் திறக்கப்படும் தேதியிலிருந்து டிசம்பர் 31, 2020 வரை இந்தத் தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு தயாரிப்பாளர்கள் உடன்படுவார்களா என்பது தெரியவில்லை.