முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ஸ்ரீபதி என்பவர் பயோகிராபி படமாக இயக்குகிறார். இந்த படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் தமிழ் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.இந்த படம் தொடர்பான மோஷன் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட இனப் போரின்போது இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் முத்தையா முரளிதரன்.என்றும், தமிழர்களுக்கு ஆதரவாக அவர் குரல் ஒலித்து இருந்தால், உலக அளவில் அதற்கு தனி கவனம் கிடைத்திருக்கும். ஆனால் அவர் சிங்கள அரசுக்கு தோள் கொடுத்தார்எனவே இப்பட த்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என ஏற்கனவே தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில்,தற்போது,கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம் அமைப்பு, ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், “தமிழ் பட நடிகர் விஜய் சேதுபதி, பீட்சா, ரம்மி, 96 போன்ற படங்களில் நடித்து புகழ் அடைந்தவர். தமிழ்படங்களால் வளர்ந்தவர். ஆனால் முத்தையா முரளிதரன் என்ற, இலங்கை கிரிக்கெட் வீரர் ஈழப்படுகொலையை மகிழ்ச்சியான நாள் என பேசியவர்.
இனப்படுகொலையாளன் ராஜபக்சவை போற்றிப் புகழ்ந்தவர். அப்பேர்பட்ட தமிழினத் துரோகியின் வாழ்க்கை வரலாற்று கதையில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் வேலையை காட்டுகிறது. பணத்திற்காக எதையும் செய்ய துணிந்துள்ள, இதுபோன்ற சுயநலவாதிகள், தமிழினத்துக்கு எதிரானவர்களை நாம் கண்டிக்க தவறினால், நாளை எல்லோரும் தமிழர்களுக்கு எதிராக பேசத் தொடங்குவார்கள்.
விஜய் சேதுபதி, “800” என்ற படத்திலிருந்து விலக வேண்டும். இல்லை என்றால் தமிழர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். எந்த வேகத்தில் வளர்ந்தாரோ, அதே வேகத்தில் சரிவார். விடுதலைப் புலிகளையும், தமிழர்களையும் இழிவுபடுத்தி யார் பேசினாலும் கர்நாடக தமிழர்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். விஜய்சேதுபதியின் படங்களை கர்நாடகாவில் ஓட விடமாட்டோம். இவ்வாறு கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில்,”விஜய் சேதுபதியால் வெட்கம்” என்று பொருள்படும் வகையில், டுவிட்டரில் விஜய் சேதுபதிக்கு எதிராக, தேசிய அளவில், ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.