சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்துமாறு, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பாதி வரி வசூலிக்கும்படி அனுப்பிய கடிதத்தில் உரிய முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமென என ரஜினி தரப்பில் வாதிடப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி, செப்டம்பர் 23ஆம் தேதி கடிதம் அனுப்பிவிட்டு செப்டம்பர் 29 -ம் தேதியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதா ? என கேள்வி எழுப்பினார்.மேலும், மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்கு தொடரமுடியும் என்றும், நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டாமா என சரமாரி கேள்வி எழுப்பினார்.
இதனால், மாநகராட்சிக்கு எதிரான மனுவை திரும்ப பெறுவதாக ரஜினி தரப்பில் கூறப்பட்டது. இவ்வழக்கு விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், நாளை அக்டோபர் 15ஆம் தேதி இரவு 12 மணிக்குள் சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.6.5 லட்சம் சொத்து வரியை ரஜினிகாந்த் கட்டத் தவறினால்,சொத்து வரித் தொகையிலிருந்து 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ராகவேந்திரா திருமண மண்டப விவகாரத்தில் ரஜினியை சென்னை உயர்நீதி மன்றம் கண்டித்துள்ள நிலையில், தற்போது ரஜினிக்கு சொத்து வரி கட்டுவது தொடர்பாக, சென்னை மாநகராட்சி நாளை நள்ளிரவுக்குள் கெடு விதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.