ஒரு சில படத்தின் பெயர்களே, இது எதைப் பற்றிய படம் என்று நம்மை யோசிக்க வைக்கும். அந்தப் படத்தின் போஸ்டர்கள் வித்தியாசமாக அமைந்துவிட்டால், ஏதோ புதிதாகச் சொல்லவுள்ளார்கள் என்று நம்மை இன்னும் ஆர்வம் கொள்ள வைக்கும். அப்படி சமூக வலைதளத்தில் சமீபமாக ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் போஸ்டர் தான் ‘எறிடா’. எதற்கு இந்த தலைப்பு, என்ன சொல்ல வருகிறார்கள் என்ற ஆர்வமே இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெற்றி படங்களை இயக்கிய வி.கே.பிரகாஷ், ‘எறிடா’ படத்தின் மூலம் தமிழில் வெற்றி இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அரோமா சினிமாஸ், குட் கம்பெனி மற்றும் ட்ரெண்ட்ஸ் ஆட்பிலிம் மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘எறிடா’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள். சம்யுக்தா மேனன், நாசர், கிஷோர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. சுமார் 55 நாட்களுக்குள் ஒட்டுமொத்த படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
கிரேக்க மொழியில் உள்ள வார்த்தை தான் ‘எறிடா’. இதற்கு “காதலில் விழுந்த ஒரு பெண் கடவுளைப் பற்றிய கதை” என்று அர்த்தம். அடுத்த காட்சி என்ன என்பதை யூகிக்க முடியாத வகையில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராக இந்தப் படம் உருவாகிறது. இதன் மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதை தயாராகி வருகிறது என உறுதியாக நம்பலாம். 2021-ம் ஆண்டு வெளியீட்டுக்காக இந்தப் படம் தயாராகி வருகிறது.