இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் 800 திரைப்படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில் , தனது டுவிட்டரில் “நன்றி, வணக்கம்” என பதிவிட்டு, இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை எனக்கூறி விஜய் சேதுபதி, 800 திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகி,அவ்விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதற்கிடையில் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து, மர்ம ஆசாமி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆபாச கருத்துகளை பதிவிட்டிருந்தார். இதற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து, சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
இதையடுத்து இவ்விவகாரம் குறித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார்அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில், விஜய் சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்த நபர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார்,கலகத்தை தூண்டுதல், ஆபாச கருத்து பதிவிடுதல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற 3 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது தெரியவந்துள்ளது. மிரட்டல் விடுத்தவரின் ஐபி முகவரி மூலம் இலங்கையில் இருப்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடுத்துள்ளனர்.இலங்கையில் உள்ள இந்த மர்ம ஆசாமியை சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்காக கொண்ட ‘இன்டர்போல்’ அமைப்பின் உதவியுடன் கைது செய்து இந்தியா கொண்டு வர மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.