இயக்குனர் இமயம், உலகநாயகன்,இசைஞானி ஆகியோரது கூட்டணியில், 1978 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சிவப்பு ரோஜாக்கள்.
இப்பட த்தின் இரண்டாம் பாகத்தை பாரதிராஜாவின் வாரிசு மனோஜ் இயக்க இருப்பதாக சில வருடங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.ஆனால்,அது அறிவிப்புடன் மட்டுமே நின்று போனது. அதன் பிறகு எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் நேரம் வரும்போது அந்தப் படத்தை இயக்குவேன் என மனோஜ் கூறியிருந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ‘சிகப்பு ரோஜாக்கள் 2’ படத்தில் கமல்ஹாசனும், சிம்புவும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதை மறுத்திருந்த மனோஜ், ‘சிகப்பு ரோஜாக்கள் 2’ குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. அவை எதுவுமே உண்மையில்லை.அனைத்தும் முடிவானதும் நானோ,அல்லது சம்பந்தப்பட்ட படத் தயாரிப்பாளரோ அதிகாரபூர்வமாக அறிவிப்போம் என்று ட்விட்டரில் கூறியிருந்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், தனது லிப்ரா படநிறுவனம் பிரம்மாண்ட தயாரிப்பாக தயாரிக்க உள்ள புதிய பட த்தின் மூலம் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகிறார் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் கூறியதாவது,
இந்தப்படம் மிக பிரமாண்டமாக உருவாக்க உள்ளது. முன்னணியில் உள்ள பெரிய நடிகர்,நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர். இயக்குனர் இமயம் பாரதிராஜா மகனை என் பட நிறுவனம் சார்பில் இயக்குநராக அறிமுகப்படுத்துவது பெரிய மகிழ்ச்சி. இது குறித்து பாரதிராஜா என்னிடம், ‘எத்தனையோ இயக்குனர்கள், நடிகர் நடிகைகளை நான் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். ஆனால் என் மகன் உன் மூலமாக இயக்குனராக அறிமுகமாக வேண்டும் என்பது இறைவன் எழுதியது’. என சொல்லிக்கொண்டே இருப்பார்.
அது மாதிரி இப்படம் எனக்கும் மனோஜுக்கும் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக அமையும். மற்றபடி இது சிவப்பு ரோஜாக்கள் பட த்தின் 2 வது பாகமா! யார் யார் நடிக்கிறார்கள் என்பது விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறார்.
நமக்கு கிடைத்த தகவல் படி இதில் நாயகனாக நடிக்க சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்கிறார்கள்.