“திருமாவளவன் மன்னிப்பு கேட்கும்வரை விடமாட்டேன்.போராடுவேன்” என்று பாஜக பிரமுகர் நடிகை குஷ்பு பகிரங்கமாக அறிவித்தார் .ஆனால் அடுத்த நாள் போராட ஆள் இல்லாமல் போயிற்று..எல்லாமே இந்த மனு ஸ்மிருதிதான் காரணம்.!
அரசமரத்தை பிடித்த சனீஸ்வரன் அங்கு உட்கார்ந்திருந்த பிள்ளையாரையும் பிடித்ததாக ஒரு கதை சொல்வார்கள். அந்த கதை மாதிரி ஆகி விட்டது நம்ம அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் கதையும்.!இவரும் மனு ஸ்மிரிதி பற்றிதான் கேள்வி கேட்டார் .
லக்னோவில் அவர் மீது எப்.ஐ.ஆர் போட்டு விட்டார்கள்.
விவரமாக சொல்லுமய்யா என்கிறீர்களா?
“கவுன் பனேகா குரோர்பதி “என்கிற கோடீஸ்வரனாகலாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வித்தியாசமான கேள்விகளை கேட்டு அமிதாப் பரிசுகள் வழங்கிவரும் ரியாலிட்டி ஷோ வடநாட்டில் நடந்து வருகிறது. இது பிக்பாஸ் மாதிரியான ரியாலிட்டி ஷோ கிடையாது. நீங்களும் கோடீஸ்வரனாகலாம் என்கிற நிகழ்ச்சி தமிழிலும் நடந்திருக்கிறது. சரத்குமார் ,சூர்யா ஆகியோர் கலந்து கொண்டு கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்.
வடநாட்டில் விறுவிறுப்பான இந்த ஷோவில் கலந்து கொண்டு கேள்விகளை கேட்டு வருகிறார் அமிதாப் . சமூக ஆர்வலர்களான பெஜவாடா வில்சன் ,நடிகர் அனூப் சோனி ஆகியோர் அன்று சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
ரூ 6,40,000 பரிசுத்தொகைக்கான அமிதாப் பச்சன் கேட்ட கேள்வி :
“1927 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் டாக்டர் அம்பேத்காரும் அவரது ஆதரவாளர்களும் எந்த நூலை எரித்தார்கள்? ( a விஷ்ணு புராணம் ,( b .பகவத் கீதை , (c .ரிக் தேவ் .( d மநுஸ்மிருதி?
இந்த கேள்விக்கான பதிலளித்த தொடர்ந்து அமிதாப் பேசுகையில் “மனு ஸ்மிருதியில் கூறப்பட்ட சாதிய பாகுபாடு ,தீண்டாமை ஆகியவற்றை கண்டித்து மனுஸ்மிருதியை கொளுத்தினார்கள்” என்று சொல்லியிருந்தார்.
வழக்கம்போல எதிர்ப்புகுரல் வந்தது. கூடவே எப்.ஐ.ஆரும் பிறந்தது.!