ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தங்களது திறமைகளை வெளிபடுத்த இந்தியா பிலிம் புராஜெக்ட்மூலம் நடத்தப்படும் திரைப்பட விழா போட்டிகள் பிரபலமானது.இந்த போட்டியில் நடிகை காயத்ரி ரோட் டு தும்பா எனும் குறும்படத்தை இயக்கி ‘கோல்டு பிலிம் ஆப் த இயர்’ என்ற தங்க விருதை பெற்றுள்ளார்.
இது குறித்து நடிகை காயத்ரி கூறுகையில், “எனக்கு தரப்பட்ட 50 மணி நேரத்தில் 20 மணி நேரம் கதை விவாததிற்கே செலவாகி விட்டது. டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயாவின் சுயசரிதையில் உள்ள ஏதேனும் ஒரு பகுதியை எடுக்க நினைத்தேன். பின் அவர் மிதிவண்டியில் ராக்கெட் பாகங்கள் எடுத்து செல்வது போன்ற புகைப்படத்தை பார்த்தேன். பின் அதன் பின்னனியை அடிப்படையாக கொண்ட கதையை முடிவு செய்தோம்.
இந்தியாவில் முதல் ராக்கெட்டை விண்வெளியில் செலுத்த சரியான இடம் அமையாத காலத்தில், ஒரு தேவாலயம் அமைந்துள்ள இடத்தை தேர்வு செய்கின்றனர். ஆலயம் உள்ள அந்த இடத்தை பெற முடிந்ததா? ஆன்மிகமும் – அறிவியலும் இரு துருவங்கள், ஆனால் நாட்டிற்காக இவை இரண்டும் ஒன்றினைந்ததா என்ற நிஜ வரலாறின் பின்னனியில் இப்படத்தை இயக்கினேன்.
தேவாலயத்தின் பாதிரியார் வேடத்தில நடிகர் பகவதி பெருமாளும் (பக்ஸ்), விக்ரம் சாராபாய் வேடத்தில் நடிகர் டி .எம்.கார்த்திக்கும் நடித்திருந்தது படத்திற்கு பலம் சேர்த்தது. என்கிறார்.இந்த குறும்படத்தின் ஒளிப்பதிவை கழுகு படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மார் மேற்கொண்டார். இசை அனிருத் விஜய்.