நடிகர் விஜய் பெயரில் அவரது அப்பா கட்சியைப் பதிவு செய்துள்ளதாக நேற்று முன்தினம் ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அடுத்த சில மணிநேரங்களிலேயே அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும்,தனது ரசிகர்கள் யாரும் அதில் சேரவேண்டாம் என்று விஜய் தரப்பிடம் இருந்து அறிக்கை வெளியானது.இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . மேலும் விஜய்யின் அறிக்கையில் எனது பெயரையோ புகைப்படத்தையோ தவறாகப் பயன்படுத்துவர் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளதாவது,“ “என் பிள்ளை நன்றாக வரணும்ங்கிறதுகாக அவரை கேட்காமலேயேதான் 1993இல் அவருக்கான ரசிகர் மன்றத்தை நான் தொடங்கினேன் . இன்று அவர் உச்ச நட்சத்திரம் ஆகிவிட்டார். அதனால, அவரு என் பிள்ளை இல்லையா? இப்பவும் விஜயை ஒரு குழந்தையாகத் தான் நினைக்கிறேன். அவருக்கு எது நல்லதோ, அதை இப்போ செய்திருக்கிறேன்.
நான் தொடங்கிய அரசியல் கட்சி அவருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், நான் அவருக்கு நல்லது என நினைத்தே இதை செய்திருக்கிறேன் .இந்த அரசியல் கட்சியை விஜயிடம் கேட்காமத்தான் தொடங்கினேன் . ஆனா, நான் செய்தது நல்லதுன்னு கொஞ்சநாள் கழிச்சு விஜய் புரிஞ்சுப்பார். தன்னோட ரசிகர்களை நான் தொடங்கிய கட்சியில் சேரவேண்டாம்ணு சொல்லியிருக்கார். அப்பா நல்லதுதான் செஞ்சிருக்காருன்னு விஜய் புரிஞ்சுக்க கொஞ்சம் பொறுத்திருக்கலாம்.
இப்போது விஜய்கிட்ட நான் பேசுவது சரியா இருக்காது. கொஞ்ச நாள் கழிச்சு பேசுவேன்.இப்ப விஜய்யை சுத்தி ஒரு சதிகார கும்பல் சூழ்ந்துள்ளது. உதவியாளர் பி.டி. செல்வகுமாரை வெளியேற்றியது முதல் அந்த கும்பல் விரித்த வலையில் விஜய் விழுந்து விட்டார். அந்த கும்பலின் சாயம் வெளுக்கும் போது அப்பா செய்தது நல்லதுக்கு தான் என தெரிய வரும். என்னோட கட்சியில் விஜயின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்தினா சட்ட நடவடிக்கை எடுப்பேன் என சொல்லியிருக்கார். அதுபோல் நடவடிக்கை எடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும். அப்பா மீது பிள்ளை நடவடிக்கை எடுத்தார் என்பதே வரலாறுதானே.” இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்