இன்னும் இரண்டே நாட்கள் இருக்கிற நிலையில் தீபாவளிக்கான படங்களைப்பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவராததால் அதிமுக அரசு அதிருப்தியில் இருந்தது. துறை தொடர்பான அமைச்சர் கடம்பூர் ராஜு “எப்படியாவது இரண்டு படங்களையாவது திரையிட்டேயாகவேண்டும் “என்று அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது.
இதன் பின்னர்தான் நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா அவசரமாக ஆலோசனை நடத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என்கிறார்கள்.
அந்த அறிக்கையின் விவரம்.:
“திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்குத்தான். VPF சம்மந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில் ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக, டிஜிட்டல் புரஜொக்ஷன் நிறுவனங்கள் திடீரென்று VPF ஐ தற்காலிகமாக 2 வாரங்களுக்கு இல்லை என அறிவித்து இருக்கிறது. நல்லது!
திரையரங்கங்களுடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தயாரிப்பாளர்களையோ திரையரங்கங்களையோ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல. பிரித்தாலும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் VPF ஐ விலக்கி இருந்தாலும் அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் பட்சத்தில் இதை எங்கள் சிறு வெற்றியாகவும் கருதி, VPF கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்கள் மட்டும் எங்கள் திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம்.
அதே சமயம் VPF கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல நிலையான தீர்வை எட்டுவதிலும் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி!”