சூரரைப்போற்று கதை : கேப்டன் கோபிநாத் எழுதிய வரலாறு.
இயக்கம் : சுதா கொங்கரா.
ஒளிப்பதிவு :நிகேத் பொம்மிராவ் ,இசை:ஜி.வி.பிரகாஷ்குமார்
நடிக நடிகையர் :சூர்யா,அபர்ணா ,ஊர்வசி ,பூ ராமு ,மோகன்பாபு ,கருணாஸ், காளிவெங்கட் ,பரேஷ் ராவல் ,
**************************
ஏர் டெக்கான் நிறுவனர் எழுதிய பயோபிக்தான் சூரரைப்போற்று படமாக திரைக்கு வந்து இருக்கிறது. ஏர்போர்ஸில் பணியாற்றிய கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தும் அவரது நண்பர்களும் சேர்ந்து சொந்தமாக ஏர் வேஸ் நடத்திய சம்பவங்களின் கோர்வையை இயக்குனர் சுதா கொங்கரா சிறப்பான திரைப்படமாக தந்திருக்கிறார். ஒரு சிறந்த திரைப்படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களும் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.
இனி கதைக்கு வருவோம்.
சோழவந்தானில் தமிழாசிரியராக பணியாற்றும் பூ ராமுவுக்கு சமூகப்பார்வையும் உண்டு .ஊர் நலன் தொடர்பான காரியங்களில் மனு போட்டு காரியங்களை சாதிக்க நினைப்பவர். சோழவந்தான் வழியே சொல்லுகின்ற ரயில்கள் அந்த ஊரில் நிற்பதில்லை என்கிற குறையை மனு போட்டு சாதித்தவர். அறவழி செல்பவர்.
இவரின் மகன் நெடுமாறன் ( சூர்யா.) அப்பாவுக்கு நேர் எதிர். அடிதடிப்பேர்வழி. இவரும் சக நண்பர்கள் இருவரும் ஏர்போர்ஸ் ரிட்டர்ன்ஸ் . இவர்களுக்கு ஏழை மக்களுக்கான விமான சேவையை தொடங்க வேண்டும் என்பது இலட்சியம். ஒரு ரூபாய் கட்டணத்தில் விமானத்தில் பயணிக்க முடியும் என்று கணக்குப்போட்டு காரியத்தில் இறங்கிய சூரர்கள்.
அவர்களால் சாதிக்க முடிந்ததா? எப்படி முடிந்தது ? அதற்காக அவர்கள் கொடுத்த விலை என்ன என்பதுதான் சுதா கொங்கராவின் திரைக்கதை. பிற்பாதி சற்று நீளம் என்றாலும் விறு விறுப்பு குறையாமல் கதையை கொண்டு சென்றிருப்பதுதான் சாதனை.
சூர்யாவின் கேரக்டருக்கு நெடுமாறன் என்று பெயர் வைத்த காரணம் என்ன?
அந்த பெயர் இயக்குநருக்கு மிகவும் பிடிக்குமாம். சூர்யாவுக்கும் பிடித்திருக்கிறது. அவரது சமூகப்பார்வையை எதிரொலிக்கும் வகையில் இருக்கிறது. மேலும் நல்ல தமிழ்ப்பெயர். தன்னுடைய பார்வை சீர்திருத்த ,பகுத்தறிவுப்பாதை என்பதை உணர்த்துவதாகவும் இருக்கிறது.
படத்தில் இடம் பெற்றுள்ள திருமணக் காட்சியைப்பற்றி குறிப்பிடாமல் நம்மால் விமர்சனத்தைக் கடந்து செல்ல முடியவில்லை.
பொதுவாக கிராமங்களில் மட்டும் இல்லாமல் நகரங்களிலும் இன்று வரை அவரவர் சக்திக்கு ஏற்ப மணமக்களுக்கு பட்டாடைகள் எடுப்பது உண்டு. இந்த படத்தில் மணமகன் நெடுமாறன் கருப்புச்சட்டை அணிந்து மணமகள் அபர்ணாவுடன் மாலை மாற்றிக்கொள்கிறான். பெரியாரின் நினைவு வராமல் இருக்க முடியாது. தமிழாசிரியரின் மகன் என்பதையும் நினைவு கொள்ளுங்கள்.
இனி கதைக்கு வருவோம்.
சூர்யாவின் நடிப்பு ,நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு ,ஜி.வி.பிரகாஷின் இசை இவை மூன்றும் படத்தின் வெகு சிறப்பான தாங்கு சக்திகள்.
அறவழியில் செல்லும் தந்தை பூ ராமு ஒரு கட்டத்தில் சினம் கொண்டு சூர்யாவை அறைந்து விடுவார்.மறு நொடியே தன்னை மறந்த சூர்யா “அடிதடியில் நம்பிக்கை இல்லாத நீ என்ன மசுத்துக்கு அடிச்சே ?”என்று வார்த்தையை விட்டுவிடுவார். அப்பனும்,பிள்ளையுமே தங்களின் எல்லையை கடந்து விட்ட காட்சி. “இனி மேல் நான் செத்தாலும் என் முகத்தில் நீ முழிக்கக் கூடாது”என்று சொல்லிவிடுவார் பூ ராமு.
அது அவரது சாவிலும் நடந்தேறுகிறது. சாகக்கிடைக்கும் தந்தையைப்பார்ப்பதற்கு போதிய பணம் இல்லாமல் விமான நிலையத்தில் பிச்சை கேட்கும்அவலத்தில் தள்ளப்பட்ட சூர்யா, தந்தையின் இறுதிச்சடங்குகள் முடிந்த பின்னர் ஊர் வந்து சேர்ந்த சூர்யா அம்மா ஊர்வசியின் காலடியில் கிடந்து கதறுகிற சூர்யா இந்த இரண்டு காட்சிகளும் நடிப்பின் உச்சம் காட்டுகின்றன. அற்புதம் சூர்யா.
சூர்யா,அபர்ணா காதல் காட்சிகள் ,விழிகள் வழியாக பார்வை அம்புகளை வீசுகிற நேர்த்தி இந்த அபர்ணா நல்லவரவு. குறிப்பாக ஸ்லோ மோஷன் நடனம் சிறப்பு அம்சம்.
திறமைசாலிகளின் முன்னேற்றத்தை தடுக்கக்கூடிய கோடீசுவர சகுனிகள் சக கோடீசுவரர் ரத்தன் டாட்டாவையே வான் வழி வணிகத்தில் நுழைய விடாமல் 22 ஆண்டுகள் தடுத்திருக்கிறார்கள் என்றால் நெடுமாறன் வகையறாக்கள் என்ன ஆவார்கள்? அரசியலும் ஆதிக்க சூழ்ச்சியும் எந்த அளவுக்கு உண்மையான முன்னேற்றத்துக்கு இடையூறாக இருக்கிறது என்பதை கோடிட்டு காட்டியிருக்கிறார் சுதா.
இந்த தீபாவளிக்கு சூரரைப் போற்று படம் பார்க்காமல் வேறு எதை பார்க்கப்போகிறீர்கள்?