சரியாக எட்டு மாதங்கள் கழித்து பிரசாத் லேப்பில் படம் பார்த்தோம் .
கடந்த மார்ச் 15 ஆம் தேதி இந்த லேப்பில் கடைசியாக பார்த்துசென்றபிறகு கொரானாவுக்காக தியேட்டரை மூடி வைத்தார்கள்.
கோவிட் 19 தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு நவம்பர் 15 -இல் தியேட்டரை மீண்டும் திறந்தார்கள்..சரியாக எட்டு மாத அடைப்புக்குப் பிறகு விமர்சகர்களுக்கு பிஸ்கோத் படம் போட்டார்கள். பேட்டிக்குப்பின் படம் இரண்டு முறை திரையிட்டுக் காட்டப்பட்டது. ஜான்சன்தான் படத்தின் பி.ஆர்.ஓ .
இயக்குநர் கண்ணனின் இயக்கத்தில் தியேட்டர்களில் வெளியாகிய இந்த படத்தின் நாயகன் சந்தானம் .நாயகி தாரா ஆலியா .ஆடுகளம் நரேன் ,ஆனந்த ராஜ் ஆகியோருடன் சேர்ந்து கும்மியடித்து நம்மை சோதனைக்குள்ளாக்கியவர்கள் மொட்டை ராஜேந்திரன்,இழுவை மனோகர். ஆறுதல் சவுகார் ஜானகியும் சந்தானமும்தான்.!
கதை வழக்கமானதுதான்.!
அந்த ஊரில் பிஸ்கட் தயாரிப்பாளர் நரேன். சிறுதொழில். கூடமாட இருந்து உதவுகிறவர் உயிர்நண்பர் ஆனந்தராஜ். நரேனின் பிள்ளைதான் சந்தானம். இவர் சிறு பிள்ளையாக இருக்கும்போதே அப்பா நரேன் மாரடைப்பில் சிவலோக பதவி அடையவே சிறுவனையும் பேக்டரியையும் வளர்க்கும் பொறுப்பு ஆனந்த ராஜுக்கு.! இந்திய அளவில் மிகப்பெரிய பேக்டரியாக வளர்ந்துவிட்டாலும் சந்தானம் அங்கு சிறு ஊழியர்தான்.!அநாதை ஆசிரமத்தை பாதுகாப்பவர்களில் சந்தானமும் ஒருவர்.
பிஸ்கட் பேக்டரியை விரிவாக்கம் செய்வதற்காக அந்த ஆசிரமத்தை இடிக்கும் முயற்சியில் பேக்டரி மானேஜர் இறங்க அதை எப்படி தடுக்கிறார் சந்தானம் என்பதுதான் கதை.
சந்தானத்தை பாகுபலி ,ரோமானிய அரசு ரேஞ்சுக்கு காட்ட சவுகார் ஜானகி பாட்டி கதை சொல்கிறார். கட்டப்பாவாக மொட்டை ராஜேந்திரன்.அந்த காலத்துப் படங்களில் ஓரங்க நாடகம் வருவதைப்போல இந்த பாகுபலி பிராண்ட் சம்பவங்களும் கடந்து போகின்றன.
சந்தானத்தின் வழக்கமான ஒன்லைனர்ஸ் அவ்வளவாக இல்லை. என்னாச்சு அவருக்கு?
தாரா ஆலிசாவுடனான லவ் ஜில்லிட்டுவிட்டது.ஜீவன் இல்லை.
அவசர அடியாக பிசுக்கோத் செய்திருக்கிறார்கள்.! 110 நிமிட ஓட்டம்தான் .சிறுபடம்தான் !ஓம குச்சி பிஸ்கோத்! தீபாவளி கழிவாக வந்திருக்கிற இரண்டு ஆபாச படங்களுக்கு மத்தியில் இந்தப்படம் சிறப்பானதுதான்.!