தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் வரும் நவம்பர் 22 ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில்நடக்க உள்ளது. இதில், தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன், பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். துணைத் தலைவர்கள் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், பி.டி.செல்வகுமார், முருகன், ஆர்.கே.சுரேஷ் ஆகிய 4 பேர் போட்டியிடுகிறார்கள்.செயலாளர்கள் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், மன்னன், சுபாஷ் சந்திரபோஸ், ராதாகிருஷ்ணன், ராஜேஷ் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு கே.ராஜன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 70 க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலுக்கான நிர்வாக குழுவிற்கான வாக்கு எண்ணிக்கை அன்றைய இரவே நடத்தி, முடிவுகளை அறிவிக்கவும், செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கையை அடுத்த நாள் நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.இந்த முடிவுக்கு படத் தயாரிப்பாளர்கள் பலரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். வழக்கமாக நடப்பது போல மாலை தொடங்கும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து இரவு முழுவதும் நடத்த வேண்டும் அல்லது அடுத்த நாள் காலை அனைத்து பதவிகளுக்குமான வாக்கு எண்ணிக்கையை தொடங்க வேண்டும் என்றும் முறையிட்டனர். இது குறித்து இன்று காலை தேர்தல் பொறுப்பாளர் ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் படத் தயாரிப்பளர்கள் கலந்து கொண்ட ஜூம் இணையதள கானொளி காட்சி கூட்டம் நடந்தது .கூட்டத்தின் முடிவில்,தேர்தல் பொறுப்பாளர் ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பட அதிபர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கையையும் வாக்கு பதிவு நடந்த மறுநாள் திங்கட்கிழமை நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்கு பதிவான பெட்டிகள் அனைத்தையும் சீல் வைக்கப்பட்ட அறையில் வைத்து மூடி போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்றும் அவர்களுடன் ஒரு அணிக்கு இருவர் வீதம் அனுமதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.