தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்று காலை 8 மணிக்கு பரபரப்புடன் தொடங்கியது. இதில் டி. ராஜேந்தர் அணியினர் வாக்காளர்களுக்கு தங்க காசு கொடுத்து வாக்குகளை பெற முயற்சிப்பதாக முரளி அணியினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஷால் தலைவராக இருந்தார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால் பிரச்னை ஏற்பட்டது.பின்னர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதற்கிடையே அரசு, சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமித்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் தேர்தல் அதிகாரியாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜெய்சந்திரனை அறிவித்து, தேர்தல் நடத்த உத்தரவிட்டது. கொரோனா காரணமாக சில முறை தேர்தல் தேதி தள்ளி வைக்கப்பட்டது.இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து தேர்தல் அதிகாரி எம்.ஜெய்சந்திரன் நவம்பர் 22 ஆம் தேதி (இன்று)தேர்தல் நடத்தப்படஉள்ளதாக அறிவித்தார். அதன்படி இன்று காலை 8 மணிக்கு சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது.உறுப்பினர்கள் பலரும் ஆர்வத்துடன் காலை முதலே வாக்களித்தனர். இதில் தலைவர் பதவிக்குபோட்டியிடும் டி.ராஜேந்தர் அணி மற்றும் முரளி அணிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இத்தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் மொத்தம் 1,303 பேர். இதில், தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன், பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். துணைத் தலைவர்கள் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், பி.டி.செல்வகுமார், முருகன், ஆர்.கே.சுரேஷ் ஆகிய 4 பேர் போட்டியிடுகிறார்கள்.செயலாளர்கள் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், மன்னன், சுபாஷ் சந்திரபோஸ், ராதாகிருஷ்ணன், கோட்டபாடி ராஜேஷ் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு கே.ராஜன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.இதில் ஜே.சதீஷ்குமார் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார். மேலும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அனிதா உதீப், அழகன் தமிழ்மணி, பாபு கணேஷ், பெஞ்சமின், சந்திரசேகர், டேவிட் ராஜ், பிரிமூஸ்தாஸ், ஏழுமலை, ஆர்.மாதேஷ், மனோபாலா, ப்ரவீன் காந்த், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட 94 பேர் போட்டியிடுகின்றனர் .வாக்கு பதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுஉள்ளது.
இதற்கு முந்தைய தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்களில், வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்திலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படும். ஆனால், இந்த முறை வாக்கு எண்ணிக்கை அடுத்த நாள் (நவம்பர் 23) காலையில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.