“உனக்கு அகிரகுரொசாவ தெரியுது ,அவரை தெரியுது இவரைத் தெரியிது. ஆனா நம்ம தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜபாகவதரை தெரியல ” என்று படத்தின் ஹீரோவை முகமூடி வில்லன் மிரட்டுறபோதே நமக்கு ‘என் பெயர் ஆனந்தன்’ செம மிரட்டலா இருக்கும்போலய “என்கிற எதிர்பார்ப்பு உச்சி மண்டையில நட்ட குத்தலா நிக்கிது.
மிஷ்கின் வகையறாக்களை இப்படி பொரிச்சு எடுக்கிறாரே டைரக்டர் ஸ்ரீதர் வெங்கடேசன் ..செம மாஸ்தான் படம் என்று நினைத்துக் கொள்கிறோம்.
ஆனால் போகப்போக ,பக்கத்து சீட்டுக்காரரிடம் கூட சந்தேகம் கேட்க முடியல. சமூக இடைவெளி.!
கதையை சுருக்கமாக சொல்லி விடுகிறோம்.
ஹீரோ சந்தோஷ் பிரதாப் வளர்ந்து வருகிற இயக்குநர் .சில குறும்படங்களை இயக்கியிருக்கிறார். முதன் முதலாக பெரிய படத்தை இயக்குகிற வாய்ப்பு கிடைக்கிறது. முதல் நாள் ஷூட்டிங். ஆசை ,ஆர்வம்,உற்சாகம் உந்தித்தள்ள காரில் புறப்படுகிறார்.
வழியிலேயே அடையாளம் தெரியாத சிலரால் கடத்தப்படுகிறார். அறை சுவர் முழுவதும் திரைப்பட மேதைகளின் படங்கள் நிரம்பி இருக்கிறது. முகமூடி அணிந்துள்ள வில்லனின் சந்தேகங்களுக்கு பதில் சொல்லித் தொலைய வேண்டியதிருக்கிறது. அதுவும் இயக்குநரின் முந்தைய குறும்படங்களை பற்றிய சந்தேகங்கள்.பதில் சொல்கிறார் சந்தோஷ் பிரதாப். கேட்ட பிறகு அவரை விடுவிக்கிறானா இல்லையா அந்த முகமூடி யார் என்பதுதான் மீதி கதை.!
சந்தோஷ் பிரதாப் வளர்ந்து வருகிற நடிகர்.மக்களை சென்றடைகிற படங்களில் நடிக்க வேண்டியவர். சோதனை எலியாக பயன்படலாமா?
புரமோஷனுக்கு அதுல்யா ரவி ஒத்துழைக்கவில்லை என்பது குற்றச்சாட்டு. இந்த படத்தில் அவர் நடித்துள்ள சீன்களை கணக்கிட்டால் நிமிடங்களில் முடிந்து விடும். பல வருஷங்களுக்கு முந்தைய முகம் .
திரில்லர் படம் என்கிற எண்ணம் ஏற்படவேண்டும் என்பதற்காக சில எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ். அதிலும் அந்த பல வேட வேஷதாரி பக்கா திணிப்பு. எதுவும் எடுபடவில்லை.
தொடக்கத்தில் விமர்சகர் மதன் ( கார்ட்டூனிஸ்ட்.) சொன்ன முன்னுரைக்கு எனது ரீ ஆக்ஷன் ..”பாவம் சார் நீங்க!”