பாலிவுட் முன்னணி நடிகை வித்யா பாலன் நடித்துவருகிற ‘ஷெர்னி’ படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் அரைகுறையாக நிறுத்தப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
என்ன காரணம்?
முன் அனுமதி பெறாமல் ஷூட்டிங்கை நடத்தினார்களா?
இல்லை.அந்த வெங்காயமெல்லாம் கிடையாது. மத்திய பிரதேச அமைச்சர் (வனத்துறை ) விஜய் ஷாவின் விருந்து அழைப்பினை நடிகை வித்யாபாலன் ஏற்க மறுத்து விட்டதால் அரசின் உத்திரவுப்படி ஷூட்டிங் நடத்த முடியாமல் போய் விட்டது என்கிறார்கள்.
திரைப்படத்தின் தயாரிப்புக் குழுவின் வாகனங்கள் படப்பிடிப்புக்காக காட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லையாம்.. இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு படக்குழு முழுவதுமாக பேக் அப் செய்யப்பட்டதாக சொல்கிறார்கள்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மந்திரி ஷா, அவர்தான் இரவு உணவிற்கான கோரிக்கையை மறுத்ததாகக் கூறினார்.
“படப்பிடிப்புக்கு அனுமதி பெற்று சிலர் என்னை அழைத்ததால் நான் சென்றிருந்தேன், என்னை மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு அழைத்தனர். ஆனால், என்னால் இப்போது உணவில் கலந்துகொள்ள முடியாது. மகாராஷ்டிராவிற்கு செல்லும்போது அவர்களை சந்திப்பதாக கூறினேன். ஆகையால், உணவுதான் ரத்து செய்யப்பட்டதே தவிர படப்பிடிப்பு இல்லை” என்று அமைச்சர் தற்போது தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆனால் உண்மையில் என்ன நடந்தது?
வித்யாபாலனுக்கும் அமைச்சருக்கும் மட்டும் தான் தெரியும் !