தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம் பிலிம் நியூஸ் ஆனந்தன் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.
தமிழ் சினிமாவின் தொடக்க காலம் முதல் இன்று வரை வெளிவந்த படங்கள் குறித்த அத்தனை தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தவர் பிலிம் நியூஸ் ஆனந்தன்.தமிழ் சினிமாவின் முதல் பிஆர்ஓ என்ற பெருமையும் அவருக்கு உண்டு. அதுமட்டுமல்ல, சினிமாவில் மக்கள் தொடர்பு என்ற பணியை அறிமுகப்படுத்தியவரும் ஆனந்தன்தான். கலைமாமணி விருது பெற்ற பிலிம்நியூஸ் ஆனந்தன், மறைந்த முதல்வர் எம்ஜிஆர், முன்னாள் முதல்வர் கருணாநிதி, இப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு நெருக்கமானவர். சிவாஜி கணேசன் குடும்பத்துடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்.தமிழ் சினிமா வரலாறு பற்றிய அவருடைய புத்தகம் திரைத்துறையினருக்கு ஒரு என்சைக்ளோபீடியா. அந்தப் புத்தகத்தை தமிழக அரசே வெளியிட்டது.அவரது உடல் தகனம் நாளை நடக்கிறது.