தமிழக அரசின் பிரதிநிதியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது தென்னிந்திய நடிகர் சங்கம். சங்கம் தற்போது அபிபுல்லாசாலையில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் இருக்கிறது. சங்கத்துக்கான கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. இதற்கு சிலர் முட்டுக்கட்டை போட்டிருப்பதால் முக்கால்வாசியில் நிற்கிறது கட்டிடம்.
தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் சங்க அலுவலகம் இயங்கி வருகிறது. , இன்று காலை 4.30 மணியளவில் நடிகர் சங்க அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி தகவல் கொடுத்தார். இதையடுத்து தி.நகர் மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஆனால் இந்த விபத்தில் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் முழுவதுமாக எரிந்து நாசமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனாலும் உறுதியான காரணம் தெரியவில்லை.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது.. இதில் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து, வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் விவகாரத்தில் அது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.இந்நிலையில் நடிகர் சங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகி விட்டதாக கூறப்படுகிறது
இது நடிகர்,நடிகைகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த தேர்தல் குறித்த முக்கிய ஆவணங்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அரசு அறிவுறுத்தலின் பேரில், வருவாய்த் துறை சிறப்பு அதிகாரி ஒருவர், நடிகர் சங்க அலுவலகத்தை நிர்வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது..