சீரியல் நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி அதிகாலை தற்கொலை செய்து கொண்டார் என்கிற செய்தி பெரிய அதிர்ச்சியை தந்தது. படப்பிடிப்பு முடிந்து அதிகாலை 2 மணி அளவில் தங்கியிருந்த ரிசார்ட்டுக்கு வந்தவர் தூக்கில் தொங்கிவிட்டார். கணவர் ஹேம்நாத்தை அறைக்கு வெளியில் நிற்கவைத்து விட்டு அந்த காரியத்தை செய்து விட்டார் என்பதாக சொன்னார்கள்.
பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தத் திருமணத்தில் சித்ராவுக்கும், அவரது தாய் விஜயாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.
சித்ராவின் மரணம் குறித்து இரு தரப்பினரையும் விசாரிக்க ஆர்.டி.ஓ. வுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து விசாரணைக்காக காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சித்ராவின் பெற்றோர் மற்றும் கணவர் ஹேம்நாத் ஆகியோர் வந்தனர்.
பகல் 12 மணிக்கு தொடங்கிய விசாரணை 3 மணி நேரம் நடந்திருக்கிறது.
விசாரணை முடிந்து வெளியில் வந்த சித்ராவின் தாய் விஜயா நிருபர்களிடம் பேசும்போது ” எந்த ஒரு தாயும் மகளின் தற்கொலைக்குக் காரணமாக மாட்டார். சித்ரா தற்கொலைக்கு முழுக்க, முழுக்க ஹேம்நாத் தான் காரணம். அதற்கான விவரங்களை ஆர்.டி.ஓ. விசாரணையில் கூறியுள்ளோம். மீண்டும் அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராவோம்.”என்று கூறியிருக்கிறார்.
நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. இன்று விசாரணை மேற்கொள்ள இருந்த நிலையில் திடீரென, சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக நசரத்பேட்டை காவல்துறையினர் ஹேம்நாத் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.
.