சிஸ்டம் சரியில்லை என்று சொல்லி புதிதாக கட்சி தொடங்கவிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் ஆனால் வீட்டுக்குள்ளேயே சிஸ்டம் கெட்டுப்போய் கிடக்கிறது.
ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் மேல்மட்டத்து பிள்ளைகள் படிப்பதற்காகவே ஆஸ்ரம் என்கிற பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார்.
எப்படி ரஜினியின் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ஏழைகளால் கல்யாணம் நடத்த முடியாதோ அதைப்போலத்தான் அவர் மனைவி நடத்தும் ஆஸ்ரம் பள்ளியிலும் ஏழை ,எளியவர்கள் படிக்க இயலாது. பள்ளிக்கட்டணம் பணக்காரர்களால் மட்டுமே கட்ட இயலும் என்கிற நிலை இருக்கிறது.
ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் செயலாளர்தான் லதா ரஜினி.
கிண்டி பகுதியில் வெங்கடேஷ்வரலு,பூர்ணசந்திரராவ் ஆகியோருக்கு சொந்தமான இடத்தில் தனது ஆஸ்ரம் பள்ளியை நடத்தி வருகிறார்.
கோடிகளில் சம்பளம் வாங்குகிறவர் ரஜினிகாந்த்.
ஆனால் அவரது மனைவி லதாரஜினிகாந்த் வாடகை கட்டாமலேயே பள்ளியை நடத்தி வந்திருக்கிறார் என்பது குற்றச்சாட்டு .வாடகை சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்தது.
2013 ஆம் ஆண்டு மார்ச் வரையிலான வாடகைப்பாக்கி 1 கோடியே 99 லட்சத்தை செலுத்தும்படி இடத்துக்கு சொந்தக்காரர்கள் 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கு முடியாமல் இருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16 ஆம் தேதி பள்ளியின் கேட்டை பூட்டி விட்டார்கள்.
பின்னர் நீதிமன்றம் தலையிட்டு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதன் பின்னரும் வாடகை பிரச்னையை லதா தீர்த்தபாடில்லை.
பின்னர் இரு தரப்பினரும் கூடிப்பேசி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இடத்தை காலி செய்வதாக உடன்பாடு ஏற்பட்டது. ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் ஒத்துக்கொண்டது.
கொரானா வந்துவிட்டதால் திட்டமிட்டபடி காலி செய்ய இயலவில்லை.
மேலும் ஒரு வருடம் அவகாசம் கோரி லதாரஜினி மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கினை நீதிபதி என் சதீஷ்குமார் விசாரித்து வந்தார்.
இடத்தை காலி செய்வதற்கான ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மாத வாடகையாக டி.டி.எஸ். தொகை உட்பட 8 லட்ச ரூபாய் முறையாக செலுத்தி வருவதாகவும், எனவே கால அவகாசத்தை இந்த கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்க வேண்டுமென லதா ரஜினிகாந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
இதன்பின்னர் நீதிபதி சதீஷ்குமார் பிரப்பித்த உத்தரவில், கிண்டியில் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வரும் கட்டிடத்தை காலிசெய்ய ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்திற்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
அவ்வாறு காலி செய்யாவிட்டால், கல்வி சங்கம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என அதன் செயலாளர் லதா மேலும், ஆஸ்ரம் பள்ளி தற்போது இயங்கும் முகவரியில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது எனவும் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்திற்கு தடைவிதித்துள்ளார்.