“சாதுர்யம் பேசாதடி .என் சலங்கைக்குப் பதில் சொல்லடி “என்று வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் பத்மினியும் ,வைஜயந்திமாலாவும் நடனமாடி போட்டியிட்டு மோதிக் கொள்கிறபோது “சபாஷ் சரியான போட்டி “என்று வில்லன் பி.எஸ்.வீரப்பா வஞ்சக சிரிப்பொன்றை வாரி வீசுவார்.
தற்போது அதே போல தமிழக அரசியலிலும் ஒரு போட்டி ஆரம்பமாகி இருக்கிறது.
தேர்தல் பிரசாரத்தை மதுரையில் தொடங்கி தெற்கு மாவட்டங்களை அலசியபோது அவ்வப்போது அவருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி .ஆருக்கும் இடையில் இருந்த உறவினைப் பற்றி பேசி வந்தார்..
“எம்.ஜி.ஆர்.முகத்தையே பார்த்திராதவர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள் “என்று ஒரு அடி கொடுத்தார்.
அதற்கும் மேலாக “நான்தான் எம்.ஜி.ஆரின் நீட்சி. அவரது வாரிசு .அவரின் மடியில் வளர்ந்தவன் நான்” என்று அதிரடி கொடுத்தார் . எம்.ஜி.ஆர் அவருக்கு பரிசு வழங்கி கமலின் நெற்றியில் முத்தமிட்ட வீடியோவை கமல் வெளியிட்டார்.
“வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?”
இவ்வளவு பேசினால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிடிக்குமா? பொங்கி விட்டார்.
“தன்னுடைய படங்கள் வழியாக கமல்ஹாசன் குடும்பங்களை சீரழித்து விட்டார். இப்போது டி.வி.யிலும் கலாசாரத்தை கெடுத்துக்கொண்டிருக்கிறார் ” என்பதாக ஒரு தாக்கு தாக்கினார். முதல்வரே பொங்கும்போது நாம் சும்மாயிருந்ததால் நல்லா இருக்காது என்று நினைத்து சக அமைச்சர்களில் சிலரும் கமல்ஹாசனை வறுத்து எடுத்தார்கள்.
கமல் பவர்புல் அஸ்திரமாக மக்கள் திலகம் பாடிய பாடலையே ஏவி விட்டிருக்கிறார்.
`சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்..
ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்.
எதிர் காலம் வரும் என் கடமை வரும்.
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்’ என்று பதில் சொன்னதுடன் “முதல்வரும்
பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று நக்கலடித்திருக்கிறார்.